‘முத்தலாக்’ தடை மசோதா மீண்டும் கொண்டுவரப்படும் மத்திய சட்ட மந்திரி தகவல்
‘முத்தலாக்’ தடை மசோதா மீண்டும் கொண்டுவரப்படும் என்று மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
புதுடெல்லி,
ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த பெண்களை அவர்களுடைய கணவன்மார்கள், ‘தலாக்’ என்று உடனுக்குடன் 3 தடவை கூறி விவாகரத்து செய்வதை தடை செய்யும் நோக்கத்தில், முத்தலாக் தடை மசோதா, நரேந்திர மோடியின் முந்தைய ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. மசோதாவின் சில அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
குற்றச்சாட்டுக்கு உள்ளான கணவன்மார்களுக்கு ஜாமீன் கிடையாது என்ற ஷரத்து நீக்கப்பட்டது. இதையடுத்து, மக்களவையில் மசோதா நிறைவேறியது. மாநிலங்களவையில், பா.ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால், மசோதா நிறைவேறாமல் நிலுவையில் இருந்தது. சமீபத்தில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால், முத்தலாக் தடை மசோதா காலாவதி ஆகிவிட்டது.
மீண்டும் வரும்
இதற்கிடையே, நரேந்திர மோடி தலைமையில் மீண்டும் பா.ஜனதா அரசு பதவி ஏற்றுள்ளது. மத்திய சட்டம் மற்றும் தொலைத்தொடர்பு துறை மந்திரியாக ரவிசங்கர் பிரசாத் மீண்டும் பொறுப்பேற்றுள்ளார்.
அவரிடம், ‘முத்தலாக்’ தடை மசோதா மீண்டும் கொண்டுவரப்படுமா? என்று நேற்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:-
ஆமாம். முத்தலாக் மசோதா, பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள விவகாரம். எனவே, ஏன் மீண்டும் கொண்டுவரக்கூடாது?
அதுபோல், பொது சிவில் சட்டம் பற்றியும் கேட்கிறீர்கள். சட்ட ஆணையம் ஏற்கனவே தனது கருத்தை தெரிவித்துள்ளது. இருப்பினும், அதுகுறித்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்துவோம்.
நீதிபதிகள் நியமனம்
நீதிபதிகள் நியமன விவகாரத்தில், மத்திய சட்ட அமைச்சகம், வெறும் தபால் அலுவலகம் போல் செயல்படாது. இந்த பிரச்சினையில் சட்ட அமைச்சகம் ஒரு பங்குதாரர். எனவே, நீதிபதிகள் நியமனத்தை விரைவுபடுத்துவதற்காக, சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகளுடன் ஆலோசனை நடத்துவோம். ‘கொலிஜியம்’ முறைக்கு நாங்கள் உரிய மரியாதை கொடுப்போம்.
கீழ்கோர்ட்டு நீதிபதி நியமனங்களை கவனிக்க அகில இந்திய நீதிப்பணிகள் அமைப்பை தொடங்க வேண்டும் என்பது மத்திய அரசின் விருப்பம். நல்லவர்கள் நீதித்துறையில் சேர வேண்டும். நீதிபதிகள் தேர்வு செய்யப்படுவது, தகுதி அடிப்படையில் அமைய வேண்டும். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினர் தகுதி அடிப்படையில் நீதித்துறையில் சேர வேண்டும்.
5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம்
5ஜி ஸ்பெக்ட்ரம் இந்த ஆண்டு ஏலம் விடப்படும். பொதுத்துறை தொலைபேசி நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல். ஆகியவற்றுக்கு புத்துயிர் ஊட்டுவதுதான் எனது முன்னுரிமை பணிகளில் ஒன்றாக இருக்கும்.
இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
Related Tags :
Next Story