கர்நாடக அரசியலில் பரபரப்பு : வெளிநாட்டில் இருந்து இன்று இரவு கர்நாடகா விரைகிறார் குமாரசாமி

கர்நாடக அரசியலில் நிலவும் சூழ்நிலை காரணமாக வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்-மந்திரி குமாரசாமி இன்று கர்நாடகா வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெங்களூரு,
கர்நாடகத்தில் காங்கிரஸ்–ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி அரசு நடந்து வருகிறது. குமாரசாமி முதல்–மந்திரியாகவும், பரமேஸ்வர் துணை முதல்–மந்திரியாகவும் பணியாற்றி வருகிறார்கள். இந்த அரசு அமைந்து ஓராண்டு நிறைவடைந்து தற்போது 2–வது ஆண்டு நடக்கிறது.
கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா, ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவரின் மகனுடன் நடத்திய பேரம் ஆடியோ உரையாடல் பதிவு வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் கர்நாடக பா.ஜனதாவுக்கு கடும் இக்கட்டான நிலை ஏற்பட்டது. இதையடுத்து நாடாளுமன்ற தேர்தல் வந்ததால் அத்துடன் அந்த முயற்சியை பா.ஜனதா தற்காலிகமாக ஒத்திவைத்தது. நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா வரலாறு காணாத வெற்றியை பெற்றது.
இந்த நிலையில், கர்நாடகவில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆனந்த்சிங், ரமேஷ் ஜார்கிகோளி ஆகிய 2 பேர் பதவியை ராஜினாமா செய்தனர். இதில் ரமேஷ் ஜார்கிகோளியின் ராஜினாமா கடிதம் தனக்கு கிடைக்கவில்லை என்று சபாநாயகர் கூறினார். ஆனந்த்சிங்கின் ராஜினாமா கடிதம் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை என கூறப்பட்டது.
இந்த பரபரப்பு அடங்கும் நிலையில் இன்று காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் 12 பேர் சபாநாயகரின் செயலாளரிடம் ராஜினாமா கடிதம் வழங்கினர்.
8 எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடித நகல்களை வழங்கி உள்ளனர். ஆட்சியை தக்கவைக்க, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மந்திரி சிவகுமார் எம்.எல்.ஏக்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ் குமார், நான் என் மகளை அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது, அதனால்தான் நான் வீட்டிற்குச் சென்று விட்டேன். சட்டப்பேரவைக்கு வர முடியாத நிலையில், 11 எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதத்தை பெற்றுக் கொள்ளும்படி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன். நாளை விடுமுறை என்பதால், திங்கள்கிழமை அவர்களை சந்திப்பேன் என்று கூறியுள்ளார்.
முதல்வர் இல்லாத நேரத்தில் அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பத்து எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா ஏற்கப்பட்டால் ஆட்சி கவிழும் என தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது, முதல்-மந்திரி குமாரசாமி, அமெரிக்கா சென்றுள்ள நிலையில் இது குறித்த தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்-மந்திரி குமாரசாமி அவசரம் அவசரமாக இன்று கர்நாடகா விரைகிறார். கர்நாடகாவில் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதனிடையே செய்தியாளர்களிடம் மஜத எம்.எல்.ஏ விஸ்வநாத்,
14 எம்.எல்.ஏக்கள் இப்போது வரை அரசுக்கு எதிராக ராஜினாமா செய்துள்ளனர். நாங்கள் ஆளுநரையும் சந்தித்தோம். எங்கள் ராஜினாமாவை ஏற்குமாறு சபாநாயகருக்கு கடிதம் எழுதினோம். கூட்டணி அரசு கர்நாடக மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை எனக் கூறினர்.
Related Tags :
Next Story