கர்நாடகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏ. பதவி விலகியதால் பரபரப்பு: குமாரசாமிக்கு நெருக்கடி முற்றுகிறது ராஜினாமா செய்தவர்களை தகுதிநீக்கம் செய்ய காங்கிரஸ் வலியுறுத்தல்

கர்நாடகத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. பதவி விலகியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குமாரசாமி அரசுக்கு நெருக்கடி முற்றுகிறது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் மேலும் ஒரு எம்.எல்.ஏ. பதவி விலகியதால் குமாரசாமி அரசுக்கு நெருக்கடி முற்றுகிறது. ராஜினாமா செய்தவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி சபாநாயகரிடம் காங்கிரஸ் கடிதம் கொடுத்துள்ளது.
கூட்டணி ஆட்சிக்கு நெருக்கடி
கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இக்கூட்டணியில் மந்திரி பதவி கிடைக்காத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 9 பேர் கடந்த 6-ந் தேதி தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். அதுபோல் ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களும் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர்.
ஏற்கனவே ஜிந்தால் நில விவகாரத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆனந்த்சிங் கடந்த 1-ந் தேதி ராஜினாமா செய்திருந்தார். எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா பின்னணியில் பா.ஜனதா இருப்பதாக காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதம் குறித்து 9-ந் தேதி (அதாவது நேற்று) பரிசீலனை செய்வதாக சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவித்தார். இதனால் கூட்டணி ஆட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
2 சுயேச்சைகள் ஆதரவு வாபஸ்
இதைத்தொடர்ந்து கூட்டணி ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) தலைவர்கள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். அதாவது, பதவி விலகிய எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை மந்திரிகளாக இருந்த சுயேச்சை எம்.எல்.ஏ.க்களான எச்.நாகேசும், ஆர்.சங்கரும் நேற்று முன்தினம் வாபஸ் பெற்றனர். இதற்கான கடிதத்தை கவர்னர் வஜூபாய் வாலாவிடம் அவர்கள் வழங்கியுள்ளனர். மேலும் அவர்கள் இருவரும் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர்.
இதனால் கூட்டணி ஆட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 104 ஆக குறைந்துவிட்டது. அதே வேளையில் பா.ஜனதாவின் பலம் 107 ஆக அதிகரித்துள்ளது.
காங்கிரஸ் சட்டசபை குழு கூட்டம்
இத்தகைய பரபரப்புக்கு மத்தியில் நேற்று காலை காங்கிரஸ் சட்டசபை குழு கூட்டம் பெங்களூரு விதானசவுதாவில் நடந்தது. இதில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், சட்டசபை காங்கிரஸ் குழு தலைவர் சித்தராமையா, துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் மற்றும் மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் 20 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை.
இதில் 7 எம்.எல்.ஏ.க்கள் தங்களால் காங்கிரஸ் சட்டசபை குழு கூட்டத்தில் பங்கேற்காததற்கு முன்கூட்டியே காரணம் தெரிவித்திருந்தனர். மற்ற 13 பேரும் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. மொத்தமுள்ள 78 (சபாநாயகரை தவிர்த்து) பேரில் 58 பேர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். ராமலிங்கரெட்டியுடன் அவரது மகள் சவுமியா ரெட்டியும் ராஜினாமா செய்திருப்பதாக சொல்லப்பட்டது. இதனால் கூட்டணி ஆட்சியை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்திருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் சவுமியா ரெட்டி காங்கிரஸ் சட்டசபை குழு கூட்டத்தில் கலந்துகொண்டார். மேலும் அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.
ரோஷன் பெய்க் ராஜினாமா
இந்த நிலையில், சபாநாயகர் ரமேஷ் குமார், எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதம் குறித்து பரிசீலிக்க விதானசவுதாவில் உள்ள தனது அலுவலகத்திற்கு வந்தார். அவர் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை பரிசீலனை செய்தார். அப்போது காங்கிரசில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வான ரோஷன் பெய்க் சபாநாயகரை சந்தித்து, எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தார்.
சிறிது நேரத்தில் சித்தராமையா, தினேஷ் குண்டுராவ் ஆகியோர் சபாநாயகர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள், சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் ஒரு கடிதம் கொடுத்தனர். அதில், 9 எம்.எல்.ஏ.க்கள் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், அவர்களை கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்றும், அவர்கள் 6 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
கட்சி தாவல் நடவடிக்கை
அதன் பிறகு சபாநாயகர் ரமேஷ் குமார் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) கட்சியை சேர்ந்த 13 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். மேலும், ரோஷன் பெய்க் எம்.எல்.ஏ.வும் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். இதில் 5 பேரின் ராஜினாமா கடிதங்கள் சட்டப்படி அமைந்துள்ளது. மற்ற 8 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதம் உரிய விதிமுறைகளின்படி இல்லை. அதனால் மீண்டும் ராஜினாமா கடிதம் வழங்குமாறு அந்த 8 எம்.எல்.ஏ.க் களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் என்னை நேரில் சந்தித்து, எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை ஏற்காமல், அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு கடிதம் கொடுத்துள்ளனர்.
இவ்வாறு ரமேஷ் குமார் கூறினார்.
கர்நாடக கூட்டணி அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால் கூட்டணி அரசு தப்புமா? இல்லை கவிழுமா? என்ற கேள்வி பலமடங்கு அதிகரித்த வண்ணம் உள்ளது.
Related Tags :
Next Story