காஷ்மீர் மறுவரைவு மசோதாவை ஆதரிக்க முடியாது-மம்தா பானர்ஜி


காஷ்மீர் மறுவரைவு மசோதாவை ஆதரிக்க முடியாது-மம்தா பானர்ஜி
x
தினத்தந்தி 6 Aug 2019 10:13 AM GMT (Updated: 6 Aug 2019 10:13 AM GMT)

காஷ்மீர் மறுவரைவு மசோதாவை ஆதரிக்க முடியாது, இந்த விவகாரம் குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் காஷ்மீர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும் என மம்தா பானர்ஜி கூறி உள்ளார்.

புதுடெல்லி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 370- ஐ, 3ஏ  நீக்கும் மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதலை பெற்று, மத்திய அரசு நீக்கியது. இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று அறிவித்தார். மேலும் ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்படும் என அறிவித்தார். 

மத்திய அரசின் முடிவுக்கு காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்டுகள்  உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதிமுக, சிவசேனா, ஆம் ஆத்மி, அசாம் கன பரிஷத், பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தாக்கல் செய்தார். இது தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்,மேற்கு வங்க முதல் அமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான் மம்தா பானர்ஜி கூறியதாவது:-

 “காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை ஆதரிக்க முடியாது, இந்த விவகாரம் குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் காஷ்மீர் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும். பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்து தகவல் இல்லை, அவர்கள் பயங்கரவாதிகள் இல்லை, உடனடியாக அவர்களை விடுவிக்க வேண்டும். ” என்று கூறியுள்ளார்.

Next Story