டி.கே.சிவகுமார் கைதை கண்டித்து கர்நாடகாவில் பல இடங்களில் காங்கிரஸ் போராட்டம்; பஸ் கண்ணாடிகள் உடைப்பு


டி.கே.சிவகுமார் கைதை கண்டித்து கர்நாடகாவில் பல இடங்களில் காங்கிரஸ் போராட்டம்; பஸ் கண்ணாடிகள் உடைப்பு
x
தினத்தந்தி 4 Sep 2019 8:47 AM GMT (Updated: 4 Sep 2019 8:47 AM GMT)

முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் கைதை கண்டித்து கர்நாடகாவில் பல இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 5 பேருந்து கண்ணாடிகளை உடைத்து பதற்றமான சூழலை உருவாக்கி உள்ளது.

பெங்களூரு,

2017-ம் ஆண்டில் கர்நாடகத்தின் எரிசக்தித் துறை அமைச்சராக  டி.கே.சிவக்குமார் இருந்தபோது, வரி ஏய்ப்பு, பண மோசடி உள்ளிட்ட புகாரில் டெல்லி மற்றும் பெங்களூருவில் உள்ள அவருக்குச் சொந்தமான இடங்களில்  வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அந்தச் சோதனையில் கணக்கில் வராத எட்டே முக்கால் கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டதாகவும்,  ஹவாலா பணப்பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் கிட்டியதாகவும், பொருளாதார குற்றங்களுக்கான நீதிமன்றத்தில் 2018-ம் ஆண்டில் வருமான வரித்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இதன் அடிப்படையில், பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சிவக்குமார் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.

வெள்ளிக்கிழமை அன்று விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அன்று தொடங்கி நேற்று வரை சிவக்குமாரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பிறகு விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை என்று கூறி நேற்றிரவு சிவக்குமாரை அமலாக்கத்துறை கைது செய்தது. கர்நாடக காங்கிரஸின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சிவக்குமார் கைதை கண்டித்து கர்நாடகத்திலும், டெல்லியிலும் அமலாக்கத்துறையைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

மருத்துவ பரிசோதனைக்காக ஆர்.எம்.எல். மருத்துவமனைக்கு சிவக்குமார் அழைத்துச் செல்லப்பட்ட போது அங்கு தொண்டர்கள் திரண்டனர். அப்போது ஒருவர் சட்டையைக் கிழித்துக் கொண்டு அழுது புரண்டார். அவரை போலீசார் அப்புறப்படுத்தினர்.

சிவக்குமார் கைது செய்யப்பட்டிருப்பது பா.ஜ.க.-வின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. கைது நடவடிக்கையை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு இன்று காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. அதன்படி, கர்நாடகாவில் இன்று பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ஒரு சில இடங்களில் பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டன. சில இடங்களில் பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டன. ஆங்காங்கே சிவக்குமார் ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கர்நாடகாவில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

இதனிடையே கைது செய்யப்பட்டுள்ள சிவக்குமார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, சிவக்குமார் கைதால் தாம் மகிழ்ச்சி அடையவில்லை என்றார். விரைவில் அவர் விடுவிக்கப்பட வேண்டும் என்று கடவுளை வேண்டுவதாகவும் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Next Story