அயோத்தி வழக்கு: இந்து அமைப்புகள் தாக்கல் செய்த புத்தகத்தை கிழித்தெறிந்த வழக்கறிஞரால் பரபரப்பு

அயோத்தி இறுதிகட்ட விசாரணையின்போது இந்து அமைப்புகள் தாக்கல் செய்த புத்தகத்தை கிழித்தெறிந்த வழக்கறிஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய தீப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், 14 மேல்முறையீட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, மூன்று பேர் கொண்ட சமரச குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தும் தீர்வு எட்டப்படவில்லை. இந்நிலையில், நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அரசியல் சாசன அமர்வு, ஆகஸ்ட் 6 ஆம் தேதி முதல் விசாரித்து வருகிறது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நவம்பர் 17 ஆம் தேதி ஓய்வு பெற உள்ளதால் அதற்குள் தீர்ப்பு அளிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு உள்ளது.
இதுவரை 39 நாட்கள் விசாரணை நடைபெற்றுள்ள நிலையில், இன்றுடன் வாதங்களை முடித்துக் கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்துக்கள் தரப்பிற்கு 45 நிமிடங்களும், முஸ்லீம் தரப்பிற்கு ஒரு மணி நேரமும் இன்று ஒதுக்கப்பட்டுள்ளது. அயோத்தி வழக்கில் இன்று மாலை 5 மணிக்குள் வாதங்களை நிறைவு செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழகில் இன்று விசாரணை துவங்கியதும், இந்து மகாசபாவை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், இந்த வழக்கில் வாதங்களை முன்வைக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் எனக்கூறினார். ஆனால், இதனை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், இந்த வழக்கில் விசாரணை மாலை 5 மணிக்கு முடிவடையும். முடிந்தது முடிந்ததாக இருக்கட்டும் என்றார்.
இதனை தொடர்ந்து நிர்மோகி அஹாரா அமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில், ராமஜென்ம பூமி என்பது ஒன்றுதான். வேறு இடத்தை கூற முடியாது. முஸ்லிம்கள் எங்கு வேண்டுமானாலும் வழிபடலாம். ராமஜென்ம பூமியில் மட்டும் தான் இந்துக்கள் வழிபட முடியும். சர்ச்சைக்குரிய நிலத்தில் முஸ்லிம்களுக்கு உரிமை இல்லை. 1934க்கு பிறகு முஸ்லீம்கள் அங்கு வழிபடுவதை நிறுத்தினர். இந்துக்கள் தான் வழிபாடு செய்கின்றனர் எனக்கூறி தனது வாதத்தை நிறைவு செய்தார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட 3 பேர் கொண்ட மத்தியஸ்த குழு, பேச்சுவார்த்தையின் போது எடுக்கப்பட்ட முடிவுகள் அடங்கிய ஆவணங்களை அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் ராஜிவ் தவான் கோபத்துடன் இந்து அமைப்புகள் தாக்கல் செய்த புத்தகத்தை கிழித்து எறிந்தார். மேலும், நீதிமன்றத்தை இந்து அமைப்புகள் கேலிக்கூத்து ஆக்குவதாகவும் கூறினார்.
இதற்கு அதிருப்தி தெரிவித்த தலைமை நீதிபதி, வழக்கறிஞர்கள் இவ்வாறு நடந்து கொண்டால், நாங்கள் எழுந்து சென்றுவிடுவோம். இப்படி நடப்பது நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதே தவிர, பலன் எதுவும் ஏற்படாது. நீதிமன்ற அறையின் மாண்பை காக்க வேண்டும் எனக்கூறினார்.
Related Tags :
Next Story