இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படும் - கோத்தபய ராஜபக்சே உறுதி


இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படும் - கோத்தபய ராஜபக்சே உறுதி
x
தினத்தந்தி 30 Nov 2019 12:15 AM GMT (Updated: 29 Nov 2019 9:40 PM GMT)

இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படும் என்று அவர் உறுதி அளித்து உள்ளார்.

புதுடெல்லி,

இலங்கையின் புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள கோத்தபய ராஜபக்சே 3 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.

டெல்லி விமான நிலையத்தில் நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) வந்து இறங்கிய கோத்தபய ராஜபக்சேவை மத்திய ராஜாங்க மந்திரி வி.கே.சிங் வரவேற்றார்.

கடந்த 18-ந் தேதி கோத்தபய ராஜபக்சே இலங்கை அதிபராக பதவி ஏற்றதைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் சிறப்பு தூதராக வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கொழும்பு சென்று, பிரதமர் மோடியின் வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்ததுடன், இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார்.

அந்த அழைப்பை ஏற்றுத்தான் கோத்தபய ராஜபக்சே இந்தியா வந்துள்ளார். அவர் இலங்கை அதிபர் பதவி ஏற்ற பின்னர் மேற்கொண்டுள்ள முதல் வெளிநாட்டு பயணம் இது என்பதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் கோத்தபய ராஜபக்சேவுக்கு நேற்று அணிவகுப்பு மரியாதையுடன் கூடிய சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி கலந்து கொண்டு அவரை வரவேற்றனர்.

அதைத் தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி முன்னிலையில், கோத்தபய ராஜபக்சே நிருபர்களிடம் பேசினார்.

அப்போது அவர், “எனது பதவிக்காலத்தில், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையேயான உறவை மிக உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்ல விரும்புகிறேன். நாம் வரலாற்று ரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் மிக நீண்ட உறவைக் கொண்டு இருக்கிறோம். நம் இரு நாடுகளும், பாதுகாப்பு, பொருளாதார மேம்பாடு, இந்திய-இலங்கை மக்கள் நலன் ஆகிய முக்கிய துறைகளில் இணைந்து செயல்பட வேண்டும்” என்று விருப்பம் வெளியிட்டார்.

கோத்தபய ராஜபக்சேவை வரவேற்றதையொட்டி பிரதமர் மோடி தமிழில் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார்.

அதில் அவர், “கோத்தபய ராஜபக்சே அவர்களை வரவேற்பதில் மகிழ்வடைகின்றேன். இலங்கை-இந்திய வரலாற்று சிறப்புமிக்க உறவுகளுக்கு இந்த விஜயம் ஒரு சான்றாகும். அதே நேரம் எமது பிணைப்பை வலுப்படுத்தவும், நல்லுறவை பலமூட்டவும் உதவும்” என குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு முடிந்த உடன், டெல்லியில் உள்ள ஐதராபாத் பவனில் பிரதமர் மோடியும், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவும் சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர்.

இலங்கையில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது, பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறவுகளை அதிகரிப்பதற்கான வழிகள், மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து பிரதமர் மோடியும், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேயும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.

அப்போது மோடி கூறுகையில், “ இரு அண்டை நாடுகளின் பாதுகாப்பும், வளர்ச்சியும் பிரிக்க முடியாதவை. இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று பாதுகாப்பு நலன் மற்றும் முக்கிய விஷயங்களில் கவனமாக இருப்பது இயல்பானது” என்று குறிப்பிட்டார்.

தமிழர்கள் பிரச்சினை பற்றியும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இதுபற்றி அவர் கூறும்போது, “இலங்கையில் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் மரியாதை ஆகியவற்றுக்கான தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் புதிய இலங்கை அரசு நல்லிணக்க செயல்முறையை தொடரும் என நம்புகிறேன். இதில் இலங்கையின் 13-வது அரசியல் சாசன திருத்தமும் அடங்கும்” என்றார்.

இந்த அரசியல் சாசன திருத்தம்தான், தமிழர்களுக்கு அதிகார பகிர்வுக்கு வகை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மீனவர்கள் பிரச்சினையில் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைகளை தொடரவும், பிரச்சினையை ஆக்கப்பூர்வமாகவும், மனிதாபிமான அணுகுமுறையுடன் கையாளவும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

இலங்கையின் வளர்ச்சி திட்டங்களுக்காக 400 மில்லியன் டாலர் (ரூ.2,880 கோடி) கடன் உதவியும், பயங்கரவாத சவால்களை சந்திப்பதற்காக தனி உதவியாக 50 மில்லியன் டாலரும் (ரூ.360 கோடி) ஆக மொத்தம் 450 மில்லியன் டாலர் (ரூ.3,240 கோடி) வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

இந்திய வீட்டு வசதி திட்டத்தின்கீழ் இலங்கையில் ஏற்கனவே 46 ஆயிரம் வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளன. தமிழ் மக்களுக்காக இப்போது 14 ஆயிரம் வீடுகள் கட்டப்படுகின்றன. சூரிய மின் திட்டங் களை நிறைவேற்றுவதற்கு இலங்கைக்கு இந்தியா 100 மில்லியன் டாலர் (சுமார் ரூ.720 கோடி) கடன் கொடுத்துள்ளது.

தொடர்ந்து பிரதமர் மோடி கூறும்போது, “பயங்கர வாதத்தை கையாள்வதில் இரு நாடுகளும் பரஸ்பர ஒத்துழைப்பை எப்படி வலுப்படுத்துவது என்பது குறித்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேயுடன் விவாதித்தேன். இந்தியாவின் முக்கிய நிறுவனங்களில் பயங்கரவாத தடுப்பு பயிற்சியை இலங்கை போலீஸ் அதிகாரிகள் பெறுகின்றனர்” என கூறி உள்ளார்.

கோத்தபய ராஜபக்சே தனது தரப்பில் கூறும்போது, “பிரதமர் மோடியுடனான பேச்சுவார்த்தை நல்ல முறையில் அமைந்தது. பாதுகாப்பு என்பது இரு தரப்பும் முக்கிய கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கிறது. உளவு தகவல்களை பகிர்ந்து கொள்வதிலும், பயங்கரவாதத்தை தடுப்பதிலும் இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவை இலங்கை எதிர்நோக்கி உள்ளது” என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், “மீனவர் பிரச்சினை குறித்து நாங்கள் விரிவாக பேசினோம். இலங்கை பிடித்து வைத்துள்ள இந்திய (தமிழக) மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.

இலங்கையில் அந்த நாட்டின் கடற்படையால் நீண்ட காலமாக சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேயின் அறிவிப்பு, தமிழக மீனவர்களுக்கு உற்சாகம் அளிப்பதாக அமைந்துள்ளது.


Next Story