மேற்கு வங்காளத்தில் புயலுக்கு 72 பேர் பலி - மீட்புப் பணிகள் தீவிரம்


மேற்கு வங்காளத்தில் புயலுக்கு 72 பேர் பலி - மீட்புப் பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 21 May 2020 11:45 PM GMT (Updated: 21 May 2020 11:19 PM GMT)

மேற்கு வங்காள மாநிலத்தை புயல் தாக்கியதில் 72 பேர் பலியானார்கள். அங்கு மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.

கொல்கத்தா,

வங்க கடலின் தென்பகுதியில் உருவாகி, வடக்கு நோக்கி நகர்ந்து வந்த உம்பன் புயல் மேற்கு வங்காள மாநிலம் டிகாவுக்கும், வங்காளதேசத்தின் ஹாடியா தீவுக்கும் இடையே நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணிக்கு கரையை கடந்தது. அப்போது மேற்கு வங்காளத்திலும், அதன் அண்டை மாநிலமான ஒடிசாவிலும் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.

இந்த புயல் மேற்கு வங்காளத்தில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. புயலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் ஆயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்தன. கொல்கத்தா நகரில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. மேலும் நூற்றுக்கணக்கான மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால் கொல்கத்தாவிலும் மற்றும் சில மாவட்டங்களிலும் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட செல்போன் கோபுரங்கள் சாய்ந்ததால் செல்போன் மற்றும் இணையதள சேவையும் துண்டிக்கப்பட்டது.

கொல்கத்தா நகரில் சில பழமையான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. பர்துவான், மேற்கு மிட்னாப்பூர், ஹூக்ளி ஆகிய மாவட்டங்களில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாயின. ‘யுனெஸ்கோ’வால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள சுந்தரவன காடுகளும் புயல், மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த காடுகள் கங்கை நதி கடலில் கலக்கும் பகுதியில் அமைந்து உள்ளன. இங்கு பல தீவுகளும் உள்ளன. பல இடங்களில் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் காட்டுக்குள் புகுந்தது.

தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்த தேசிய பேரிடர் மீட்பு படையினரும், தீயணைப்பு படையினரும் விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். சாய்ந்து கிடந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினார்கள். மின் கம்பங்களை அப்புறப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தெற்கு மற்றும் வடக்கு 24 பர்கானா உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பலத்த மழை பெய்ததால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. ஏராளமான நெற்பயிர்கள் நாசமாயின. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். என்றாலும் மரங்கள் சாய்ந்தும், சுவர் இடிந்து விழுந்தும், மின்சாரம் தாக்கியும் பலர் பலி ஆனார்கள்.

இதுபற்றி முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று கூறியதாவது:-

கொரோனாவை விட புயல் மேற்கு வங்காளத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி புயலின் காரணமாக மாநிலத்தில் 72 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். அவர்களுடைய குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் முதல் ரூ.2½ லட்சம் வரை வழங்கப்படும்.

தெற்கு மற்றும் வடக்கு 24 பர்கானா மாவட்டங்கள் முற்றிலும் நாசமாகிவிட்டன. இந்த மாவட்டங்களை மீண்டும் சீரமைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சீரமைக்க தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யவேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நான் விரைவில் சென்று பார்வையிட இருக்கிறேன். சீரமைப்பு பணிகள் விரைவில் முழுவேகத்தில் தொடங்கும்.

என் வாழ்க்கையில் இதுபோன்ற ஒரு புயலையும், பேரழிவையும் நான் கண்டதில்லை. பிரதமர் மோடி மேற்கு வங்காளத்துக்கு வந்து புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக புயல் சேதங்கள் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். புயல் காரணமாக ஒடிசா மாநிலத்திலும் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் கடலோர மாவட்டங்களின் பல இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கின. என்றாலும் மேற்கு வங்காளம் அளவுக்கு அங்கு பெரும் சேதம் ஏற்படவில்லை. ஒடிசாவிலும் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருந்தன.

‘உம்பன்’, கடந்த 100 ஆண்டுகளில் காணாத கடுமையான புயல் இது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ‘டுவிட்டர்’ பதிவில், சவாலான இந்த காலகட்டத்தில் ஒட்டுமொத்த தேசமும் மேற்கு வங்காளத்துக்கு ஆதரவாக இருப்பதாகவும், அந்த மாநில மக்களின் நலனுக்காக பிரார்த்திப்பதாகவும், அங்கு இயல்புநிலை திரும்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்து உள்ளார்.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் ஆகியோரை தொடர்பு கொண்டு அங்குள்ள புயல் பாதிப்பு நிலவரம் குறித்து கேட்டு அறிந்தார். அப்போது மத்திய அரசு தேவையான உதவிகளை வழங்கும் என்று அவர்களிடம் உறுதி அளித்தார். இந்த தகவலை தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ள அவர், மேற்கு வங்காளத்துக்கு கூடுதலாக தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாக கூறி இருக்கிறார்.

மத்திய மந்திரிசபை செயலாளர் ராஜீவ் கவுபா தேசிய நெருக்கடிகால மேலாண்மை குழு கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். இதில் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேற்கு வங்காளம், ஒடிசா மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களும் காணொலி காட்சி மூலம் இதில் பங்கேற்றனர். புயல் சேதங்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக இரு மாநிலங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் குழுக்களை அனுப்பிவைக்க இருக்கிறது.

Next Story