மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா: இந்தியாவில் பாதிப்பு 4.25 லட்சத்தை தாண்டியது
மின்னல் வேகத்தில் பரவும் கொரோனாவால் இந்தியாவில் பாதிப்பு 4.25 லட்சத்தை தாண்டி உள்ளது.சற்றே நம்பிக்கை அளிக்கும் வகையில் குணமடைவோர் விகிதம் 55.77 சதவீதமாக அதிகரித்துள்ளது.
புதுடெல்லி
உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 90.38 லட்சமாக உயர்ந்து உள்ளது.கொரோனா பாதிப்பில் இருந்து 48.33 லட்சம் பேர் குணமடைந்த நிலையில் 4.6 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,821 பேருக்கு கொரோனா தொற்று; 445 பேர் உயிரிழந்து உள்ளனர்
மொத்த பாதிப்பு 4,25,282 ஆக உயர்ந்து உள்ளது;குணமடைந்தவர்கள் - 2,37,196,உயிரிழப்பு - 13,699 ஆகும்.
இந்தியாவில் கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் இதுவரை இல்லாத வகையில், புதிதாக 15,413 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி ஒரே நாளில் 306 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் கூறியுள்ளது.
நாளுக்கு நாள் கொரோனா பரிசோதனையும் அதிகரித்து வருவதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1 லட்சத்து 90 ஆயிரத்து 730 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மராட்டியத்தில் ஒரே நாளில், முன்னெப்போதும் இல்லாத வகையில் 3,874 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மராட்டியாவை தொடர்ந்து அதிகபட்சமாக டெல்லியில் ஒரே நாளில் 3,630 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதன்மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 4 லட்சத்தை கடந்துள்ளது.
இந்தியாவில் முதல் தொற்று கண்டறியப்பட்டதில் இருந்து, ஒரு லட்சம் தொற்றுகள் என்ற எண்ணிக்கையை எட்ட 78 நாட்கள் ஆனது. 2 லட்சம் என்ற எண்ணிக்கையை கடக்க, 15 நாட்களே தேவைப்பட்டது. ஆனால் பத்தே நாட்களில் 3 லட்சம் பாதிப்புகளை கடந்தது. தற்போது 8 நாட்களிலேயே நான்காவது ஒரு லட்சம் பாதிப்புகளை இந்தியா தாண்டியுள்ளது. இந்தியாவின் மொத்த பாதிப்புகளில் 75 சதவீதம் பாதிப்புகள் மே 19 ஆம் தேதிக்கு பிறகே பதிவாகியுள்ளன.
அதாவது ஒரு மாதத்தில் சுமார் 3 லட்சம் பாதிப்புகள் பதிவாகியுள்ளது. தொற்றின் தீவிரத்தை உணர்த்துவதாக உள்ளது. இதேவேகத்தில் கொரோனா பரவினால், அடுத்த 15 நாட்களில் இந்தியாவின் பாதிப்பு எண்ணிக்கை ரஷ்யாவை விஞ்சிவிடும்,பாதிப்புகளில் உலக அளவில் 3-வது இடத்தை எட்டும் என அஞ்சப்படுகிறது.
இந்தியாவின் மொத்த பாதிப்புகளில் சுமார் 70 சதவீதம் பாதிப்புகள் முதல் 5 இடங்களில் உள்ள மாநிலங்களிலேயே உள்ளது. ஆனால் இந்தியாவின் மொத்த உயிரிழப்புகளில் சுமார் 83 சதவீத உயிரிழப்புகள் மராட்டியம், தமிழ்நாடு, டெல்லி, குஜராத் மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களிலேயே பதிவாகியுள்ளன. எனினும் சற்றே நம்பிக்கை அளிக்கும் வகையில் குணமடைவோர் விகிதம் 55 .77 சதவீதமாக அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story