நடிகர் அமிதாப்பச்சன், குடும்பத்தினர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார்கள் ஆஸ்பத்திரி நிர்வாகம் தகவல்


நடிகர் அமிதாப்பச்சன், குடும்பத்தினர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார்கள் ஆஸ்பத்திரி நிர்வாகம் தகவல்
x
தினத்தந்தி 20 July 2020 3:00 AM IST (Updated: 20 July 2020 1:05 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார்கள் என ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

மும்பை,

பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது கடந்த 11-ந் தேதி உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர்கள் இருவரும் மும்பையில் உள்ள நானாவதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் அபிஷேக்பச்சனின் மனைவி நடிகை ஐஸ்வர்யாராய், மகள் ஆராத்யாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. தாய்-மகள் இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்்சை பெற்றனர். பின்னர் அவர்களும் நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் நடிகர் அமிதாப்பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இந்தநிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அமிதாப்பச்சன், அவரது மகன், மருமகள், பேத்தி ஆகிய 4 பேரின் உடல் நிலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் அவர்கள் ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நடிகர் அமிதாப்பச்சன் தனது மகன், மருமகள், பேத்தி ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, தாங்கள் குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.

அதில், எனது குடும்பம் உங்களது அன்பை காண்கிறது. உங்கள் பிரார்த்தனைகள் எங்களுக்கு கேட்கிறது. கையெடுத்து வணங்கி நன்றி தெரிவிக்கிறோம். நீங்கள் அனைவரும் எங்கள் வாழ்க்கையில் இருப்பது மிகவும் அதிர்ஷ்டம். இது எங்களுக்கு பலம் அளிக்கிறது என்று தெரிவித்து உள்ளார்.

Next Story