தேசிய செய்திகள்

கொரோனா வைரசை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை + "||" + Do not take corona virus lightly; PM Modi warns the people of the country

கொரோனா வைரசை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

கொரோனா வைரசை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை
கொரோனா வைரசை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த பிரதமர் மோடி, முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தினார்.
புதுடெல்லி,

பீகாரில் அடுத்த மாதம் (அக்டோபர்) சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு மீன்வளத்துறையில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பத யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.20,050 கோடி திட்டங்களை பிரதமர் மோடி நேற்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

மேலும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக மேலும் பல மீன்வளத்துறை மற்றும் கால்நடைத்துறை திட்டங்களை டெல்லியில் இருந்தவாறே தொடங்கி வைத்தார். அத்துடன் விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக சிறப்பு செல்போன் செயலி ஒன்றையும் அவர் அறிமுகம் செய்தார்.

பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு கொரோனா தொடர்பான எச்சரிக்கையையும், அறிவுரையும் வழங்கினார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘உங்களிடம் இருந்து எனக்கு சில எதிர்பார்ப்புகள் உள்ளன. அதாவது முககவசம் அணிந்து, 2 மீட்டர் இடைவெளியை கடைபிடிக்கும் விதியை பின்பற்றுங்கள். பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருங்கள். குடும்பத்தில் உள்ள மூத்த குடிமக்களை கவனியுங்கள். இவை அனைத்தும் முக்கியமானது. கொரோனா வைரசை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்’ என எச்சரிக்கை விடுத்தார்.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை விஞ்ஞானிகள் உருவாக்கும்வரை, இத்தகைய சமூக தடுப்பூசிதான் நம்மை பாதுகாக்க சிறந்த வழிகள் என்று கூறிய மோடி, இது மட்டுமே ஒரே தீர்வாகும் என்றும் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து பேசிய பிரதமர், பீகாரில் தற்போதைய கொரோனா காலத்தில் மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்டுள்ள ஏராளமான திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

கொரோனா வைரசையும், வெள்ளப்பெருக்கையும் பீகார் தைரியமாக எதிர்கொண்டது. பீகாரிலும், அதை சுற்றி உள்ள பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படுத்திய சேதத்தை நாங்கள் அறிவோம். மத்திய-மாநில அரசுகள் இணைந்து மேற்கொண்ட முயற்சிகளால் விரைவாக நிவாரணப்பணிகள் முடிக்கப்பட்டன.

அரசு மேற்கொண்ட முயற்சிகளால் கிராமப்புறங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தது. விவசாயிகள் பலன்பெறுவதற்காக மத்திய அரசு நேரடியாக அவர்களது வங்கி கணக்கில் ரூ.6 ஆயிரத்தை செலுத்துகிறது. இதில் பீகாரை சேர்ந்த 75 லட்சம் விவசாயிகள் இதுவரை பயன்பெற்றுள்ளனர். நாடு முழுவதும் 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

பீகாரில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் தேவையில் உள்ள அனைவரையும் இலவச ரேஷன் சென்று சேர்ந்துள்ளது. பண்டிகைகள் காரணமாக இந்த திட்டம் நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.

கொரோனா காலத்தில் ஏராளமான புலம்பெயர்ந்தவர்கள் பீகாருக்கு திரும்பி உள்ளனர். அவர்கள் கால்நடைத்துறை சார்ந்த பணிகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டியுள்ளனர். எனவே இந்த துறையில் அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து உள்ளது.

பீகாரின் கிராமப்பகுதிகளிலும் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதற்கு முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் ஆட்சியில் சிறப்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வெறும் 2 சதவீத குடும்பங்களுக்கு மட்டுமே பாதுகாப்பான குடிநீர் கிடைத்து வந்தது. தற்போது இது 70 சதவீதத்தை கடந்திருக்கிறது.

1½ கோடி குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு கிடைத்து உள்ளது. அதுவும் இந்த கொரோனா காலத்தில் 60 லட்சம் வீடுகள் குடிநீர் இணைப்பு பெற்றுள்ளன. இது மிகப்பெரிய சாதனை ஆகும்.  இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய கால்நடைத்துறை மந்திரி கிரிராஜ் சிங், இணை மந்திரிகள் சஞ்சவ் பல்யான், பிரதாப் சந்திர சாரங்கி மற்றும் பீகார் துணை முதல்-மந்திரி சுஷில்குமார் மோடி ஆகியோர் கலந்து கொண்டனர்.  இந்த திட்டங்களை தொடங்கி வைத்த பின்னர் பீகார் மாநில விவசாயிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடலும் நடத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

1. புரட்டாசி விரதம் முடிவடைந்தது: மார்க்கெட், இறைச்சி கடைகளில் அலைமோதிய கூட்டம் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்
புரட்டாசி விரதம் முடிவடைந்த நிலையில் நேற்று மார்க்கெட் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
2. மும்பையில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு புனேயில் மழை கொட்டியது
மும்பையில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. புனேயில் நேற்று பலத்த மழை பெய்தது.
3. கர்நாடகத்தில் பலத்த மழைக்கு தாய்-மகள் உள்பட 6 பேர் பலி 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வங்கக்கடலில் குறைந்த அழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளதால் கர்நாடகத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த கனமழைக்கு தாய்-மகள் உள்பட ஒரே நாளில் 6 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையே 12 மாவட்டங் களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
4. முக கவசம் அணியாமல் அலட்சியம்; நவம்பரில் கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்பு: சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை
சென்னையில் முக கவசம் அணியாமல் மக்கள் அலட்சியம் காட்டி வரும் நிலையில், கொரோனா பாதிப்பு நவம்பர் மாதத்தில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.
5. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்தவில்லை என்றால் போராட்டம் பா.ஜ.க. எச்சரிக்கை
மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை திறக்கவேண்டும், ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை புதுவையில் அமல்படுத்தவில்லை என்றால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. அறிவித்துள்ளார்.