இந்தியாவில் ஒரே நாளில் 86 ஆயிரம் பேர் குணம் 80 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா


இந்தியாவில் ஒரே நாளில் 86 ஆயிரம் பேர் குணம் 80 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா
x
தினத்தந்தி 1 Oct 2020 4:56 AM IST (Updated: 1 Oct 2020 4:56 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் ஒரே நாளில் 86 ஆயிரம் பேர் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில் புதிதாக 80 ஆயிரம் பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லி,

சீன நாட்டின் உகான் நகரில் கடந்த டிசம்பரில் தோன்றிய கொரோனா தொற்று, இப்போது உலக நாடுகளையெல்லாம் கதிகலங்க வைத்து வருகிறது. 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி விட்ட இந்த தொற்றால் 3.39 கோடி பேர் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் மட்டுமே 74.11 லட்சம் பேர் தொற்று பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

அதைத் தொடர்ந்து மோசமான பாதிப்பை சந்தித்து வருகிற நாடுகளாக இந்தியா, பிரேசில், ரஷியா, கொலம்பியா ஆகிய நாடுகள் இருக்கின்றன. தொடர்ந்து உலகமெங்கும் இந்த தொற்று பரவி வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 86 ஆயிரத்து 428 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். இதையடுத்து கொரோனாவில் இருந்து மீட்கப்பட்டோர் எண்ணிக்கை 51 லட்சத்து 87 ஆயிரத்து 825 பேர் ஆக உயர்ந்து இருக்கிறது. கொரோனா மீட்பு அளவும் 83.33 சதவீதமாக அதிகரித்துள்ளது. நாட்டில் தற்போது கொரோனாவில் இருந்து மீள்வதற்காக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 40 ஆயிரத்து 441 ஆக உள்ளது. இது மொத்த பாதிப்பில் 15.11 சதவீதம் மட்டும்தான். குணம் அடைந்தோருக்கும், சிகிச்சை பெறுவோருக்குமான இடைவெளி 42 லட்சத்தை தாண்டி விட்டது.

அதே நேரத்தில் நேற்று ஒரே நாளில் 80 ஆயிரத்து 472 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு 62 லட்சத்து 25 ஆயிரத்து 763 ஆக அதிகரித்துள்ளது,

நேற்று முன்தினம் நாடு முழுவதும் 10 லட்சத்து 86 ஆயிரத்து 688 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ள நிலையில்தான் இந்த அளவுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதுவரை நாட்டில் 7.41 கோடி மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புள்ளி விவரம் சொல்கிறது.

ஒரே நாளில் கொரோனாவுக்கு நாடு முழுவதும் 1,179 பேர் பலியாகி இருக்கிறார்கள். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 97 ஆயிரத்து 497 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் கொரோனா இறப்பு விகிதம் என்பது 1.57 சதவீதமாக குறைந்துள்ளது.

நேற்று பலியான 1,179 பேரில் 430 பேர் மராட்டிய மாநிலத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகத்தில் 136, பஞ்சாப்பில் 75, உத்தரபிரதேசத்தில் 63, மேற்கு வங்காளத்தில் 62, டெல்லியில் 48, மத்திய பிரதேசத்திலும், சத்தீஷ்காரிலும் தலா 39, ஆந்திராவில் 35 பேர் பலியாகி இருக்கிறார்கள்.

மொத்த பலியான 97 ஆயிரத்து 497 பேரில், 36 ஆயிரத்து 181 பேரை இழந்து மராட்டியம் முதல் இடத்தில் நீடிக்கிறது. 2-வது இடத்தில் தமிழகம் உள்ளது. உயிரிழந்தவர்களில் 70 சதவீதத்துக்கு மேற்பட்டோர், பிற நாள்பட்ட நோய்களுடன் கொரோனாவும் வந்து தாக்கியதால் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

உலகளவில் கொரோனா பலியில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் (2.11 லட்சம்) உள்ளது. இரண்டாவது இடத்தில் பிரேசில் (1.43 லட்சம்) நீடிக்கிறது. 3-வது இடத்தில் இந்தியா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story