ரூ.2 கோடி வரையிலான வங்கி கடனுக்கு வட்டிக்கு வட்டி இல்லை; சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்


ரூ.2 கோடி வரையிலான வங்கி கடனுக்கு வட்டிக்கு வட்டி இல்லை; சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 4 Oct 2020 5:15 AM IST (Updated: 4 Oct 2020 4:29 AM IST)
t-max-icont-min-icon

ரூ.2 கோடி வரையிலான வங்கி கடன்களுக்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

வங்கிகளில் மக்கள் பெற்ற கடன்களுக்கான மாதத்தவணையை கொரோனாவால் 3 மாதங்களுக்கு ஒத்திவைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது. இதை மீறி வங்கிகள் கடன் பெற்றவர்களிடம் இருந்து தொடர்ந்து வட்டி வசூலிப்பதாகவும், அதை ரத்து செய்யக்கோரியும் கஜேந்திர சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இந்த வழக்கை நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த மாதம் (செப்டம்பர்) 28-ந் தேதி விசாரணை நடைபெற்றது.

அப்போது சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிடுகையில், ‘மார்ச் முதல் ஆகஸ்டு மாதம் வரையிலான தவணையுரிமை காலத்தில், வட்டிக்கு வட்டி வசூலிக்கும் விவகாரம் தொடர்பாக அரசின் உயர்மட்ட அளவில் எடுக்கப்படும் முடிவு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக எடுக்கப்படும் முடிவு அடங்கிய பிரமாண பத்திரம் அக்டோபர் 1-ந் தேதிக்குள் தாக்கல் செய்யப்படும்’ என்று கூறினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு அவகாசம் அளித்ததுடன், வழக்கு விசாரணையை அக்டோபர் 5-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சக சார்பு செயலாளர் ஆதித்யா குமார் கோஷ் சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

மார்ச் முதல் ஆகஸ்டு வரையிலான கடன் தவணை காலத்தில் அனைத்து வகை கடன்களுக்கும் வட்டியை தள்ளுபடி செய்தால், அதன் தொகை 6 லட்சம் கோடிக்கும் மேலாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 6 லட்சம் கோடி தொகைக்கான நிதிச்சுமையை வங்கிகள் ஏற்றால், அவற்றின் கணிசமான நிகர மதிப்பு முற்றிலுமாக தீர்ந்துவிடும். உதாரணத்துக்கு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கடன்களுக்கான ஆறு மாத வட்டியை தள்ளுபடி செய்தால், அந்த வங்கியின் நிகர மதிப்பில் பாதி தீர்ந்து விடும். வங்கிகள் தொடர்ந்து இயங்க முடியாமல் போகும் என்பதால் தான் வட்டியை தள்ளுபடி செய்வது குறித்து ஆராயவில்லை. வங்கிகளில் டெபாசிட் வைத்துள்ளவர்களுக்கு கூட்டு வட்டி உள்ளிட்ட வட்டியை தொடர்ந்து அளிப்பது வங்கி செயல்பாடுகளில் மிக முக்கியமான ஒன்றாகும்.

வங்கிகளில் டெபாசிட் வைத்துள்ளவர்களை விட, கடன் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்திய வங்கி முறையில் ஒவ்வொரு கடன் பெறுவோர் கணக்குக்கு 8.5 டெபாசிட் கணக்குகள் உள்ளன. கடன் பெறுவோர் அதற்கான வட்டியை கட்டினால்தான் டெபாசிட்தாரர்களுக்கு வட்டியை வங்கிகள் அளிக்க முடியும். டெபாசிட்தாரர்கள், வங்கிகள், கடன் பெற்றவர்கள் ஆகியோருக்கு இடையே உள்ள கொடுக்கல் வாங்கல் வங்கி முறையில் பிணைக்கப்பட்ட சங்கிலித்தொடராக உள்ளது.

இந்த சங்கிலி தொடர் அறுந்து போக ஒரு போதும் அனுமதிக்க முடியாது. எனவே, அனைத்து வகையான கடன்களுக்கும் ஆறு மாதத்திற்கு ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட வட்டியை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட அனைத்து அம்சங்களையும், சர்வதேச அளவில் மோசமாக உள்ள பொருளாதார சூழல், தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார சூழல் உள்ளிட்டவற்றை ஆராய்ந்த பிறகு மத்திய நிதி அமைச்சகம் சில முடிவுகளை எடுத்துள்ளது.

சிறிய அளவிலான கடன் பெற்றவர்களுக்கு மார்ச் முதல் ஆகஸ்டு மாதம் வரையிலான 6 மாதத்திற்கான கூட்டு வட்டியை தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளது. 2 கோடி ரூபாய் வரை கடன் வாங்கியுள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், கல்வி கடன் பெற்றவர்கள், வீட்டுக்கடன், வாகனக்கடன், தொழில் புரிய 2 கோடி ரூபாய் வரை கடன் பெற்ற தனிநபர்கள், 2 கோடி ரூபாய் வரையிலான கன்ஸ்யூமர் கடன் பெற்றவர்கள், 2 கோடி ரூபாய் வரை கிரெடிட் கார்டு நிலுவை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் 6 மாதத்திற்கான கூட்டு வட்டியை (வட்டிக்கு வட்டி வசூலிப்பது) தள்ளுபடி செய்ய முடிவு செய்துள்ளது.

இவ்வாறு பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நாளை (திங்கட்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Next Story