வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தான் சட்டப்பேரவையில் 3 மசோதாக்கள் அறிமுகம்


வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தான் சட்டப்பேரவையில் 3 மசோதாக்கள் அறிமுகம்
x
தினத்தந்தி 31 Oct 2020 10:20 AM GMT (Updated: 31 Oct 2020 10:20 AM GMT)

மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக, ராஜஸ்தான் அரசு 3 மசோதாக்களை சட்டப்பேரவையில் இன்று அறிமுகம் செய்தது.

ஜெய்பூர்,

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகள், விவசாய அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், அரியானா மாநிலங்களில் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தன. 

இதையடுத்து,  மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் அரசு சட்டப்பேரவையைக் கூட்டி 3 மசோதாக்களை கடந்த 20-ம் தேதி நிறைவேற்றியது. இந்த நிலையில்,  ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையிலும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக 3 மசோதாக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டன.  அதன்பின், சமீபத்தில் மறைந்த முன்னாள்  ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மற்றும் மாநிலத் தலைவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை ஒத்தி வைக்கப்பட்டு திங்கள்கிழமை கூடும் என அறிவிக்கப்பட்டது.

வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதா ஆகியவை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு கடந்த மாதம் (செப்டம்பர்) 27-ந் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதைத்தொடர்ந்து இவை சட்டமாக மாறின.

இந்த சட்டங்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரஸ் கட்சி எந்தெந்த மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறதோ அங்கு, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மசோதாக்களைத் தாக்கல் செய்து நிறைவேற்றிட வேண்டும் எனக் காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தி இருந்தது நினைவுகூரத்தக்கது. 


Next Story