பா.ஜ.க. தலைவர் கார்மீது தாக்குதல் மத்திய அரசுக்கும் மம்தா அரசுக்கும் வலுக்கும் மோதல் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்திய பணிக்கு அதிரடி மாற்றம்


Image courtesy : BJP Bengal/Twitter
x
Image courtesy : BJP Bengal/Twitter
தினத்தந்தி 12 Dec 2020 7:42 PM IST (Updated: 12 Dec 2020 7:42 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. தலைவர் கார் தாக்குதல் விவகாரத்தில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மத்திய பணிக்கு அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இதனால் மத்திய அரசுக்கும், மம்தா அரசுக்கும் இடையேயான மோதல் வலுக்கிறது.

கொல்கத்தா: 

பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா, மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள டைமண்ட் ஹார்பருக்கு கடந்த 10–ந்தேதி சென்றபோது, அவரது வாகனம், பாதுகாப்பு வாகனங்கள் கல்வீசி தாக்கப்பட்ட விவகாரம் விசுவரூபம் எடுத்து வருகிறது. மாநில சட்டம், ஒழுங்கு நிலவரம் குறித்து கவர்னர் ஜகதீப் தாங்கர், மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார். அதன் பேரில் உள்துறை அமைச்சகம் அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. 

இது தொடர்பாக 14–ந்தேதி (நாளை) கூட்டப்பட்டுள்ள கூட்டத்தில் மேற்கு வங்காள அரசு தலைமைச்செயலாளர் அலபன் பந்தோபாத்யாவும், போலீஸ் டி.ஜி.பி. வீரேந்திராவும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

ஆனால் அவர்களை அனுப்ப மாட்டோம் என மம்தா பானர்ஜி அரசு முடிவு எடுத்துள்ளது.

மம்தா கட்சி தலைவர் கடிதம்

இது தொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லாவுக்கு மாநில அரசு தலைமைச்செயலாளர் அலபன் பந்தோபாத்யா நேற்று  கடிதம் எழுதினார்.

ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், மக்களவையில் அந்த கட்சியின் தலைமை கொறடாவுமான கல்யாண் பானர்ஜியும் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லாவுக்கு இன்று ஒரு கடிதம் எழுதினார்.

அதில் அவர், ‘‘ஜே.பி.நட்டா கார் தாக்குதலில் மேற்கு வங்காளத்தின் தலைமைச்செயலாளரையும், போலீஸ் டி.ஜி.பி.யையும் டெல்லிக்கு வரவழைப்பது அரசியல் நோக்கம் கொண்டது, சட்டம்–ஒழுங்கு என்பது மாநில அரசின் பிரச்சினை. எனவே சட்டம், ஒழுங்குக்கு மாநில சட்டசபைக்குத்தான் அரசு பொறுப்பு கூறுமே ஒழிய, உங்களுக்கோ அல்லது உங்கள் உள்துறை மந்திரிக்கோ அல்ல’’ என சூடாக கூறி உள்ளார்.

3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்

இந்த நிலையில், ஜே.பி.நட்டா பாதுகாப்புக்கு பொறுப்பு என கூறப்படுகிற 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அதிரடியாக மத்திய பணிக்கு அழைத்து உத்தரவிட்டுள்ளது.

அந்த அதிகாரிகள், ராஜீவ் மிஸ்ரா, பிரவீண் குமார், போலாநாத் பாண்டே ஆவார்கள் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளை மாநில பணியில் இருந்து மத்திய பணிக்கு அழைக்க முடியும் என்ற விதிகளின்கீழ் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதே நேரத்தில், ஒரு மாநிலத்தில் இருந்து மத்திய பணிக்கு அதிகாரிகளை இடமாற்றம் செய்கிறபோது, சம்மந்தப்பட்ட மாநில அரசின் ஒப்புதல் பெறப்படுவது வழக்கம். ஆனால் இந்த 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடமாற்றத்தில் மாநில அரசின் ஒப்புதலை மத்திய அரசு பெற்றதா என்பது குறித்து தகவல் இல்லை.

மோதல் வலுக்கிறது

அடுத்த சில மாதங்களில் மேற்கு வங்காள சட்டசபைக்கு தேர்தல் நடக்க உள்ள நிலையில், ஜே.பி.நட்டா கார் தாக்கப்பட்ட விவகாரத்தில் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள மம்தா அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு வலுத்து வருவது அரசியல் அரங்கை பரபரப்பாக்கி வருகிறது.


Next Story