நகராட்சி பணியாளர்கள் சாலையில் வீசி சென்ற 10 பேரில் கணவரை அடையாளம் கண்ட பெண்
மத்திய பிரதேசத்தில் நகராட்சி பணியாளர்கள் சாலையில் வீசி சென்ற 10 பேரில் தனது கணவரை அடையாளம் கண்டு பெண் ஒருவர் மீட்டு சென்றுள்ளார்.
இந்தூர்,
மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் ஆதரவின்றி தெருவில் சுற்றி திரிபவர்களை நகராட்சி பணியாளர்கள் பிடித்து வாகனத்தில் ஏற்றி அரசு காப்பகத்திற்கு அழைத்து சென்றனர். ஆனால், செல்லும் வழியில் சாலையில் சிலரை வாகனத்தில் இருந்து கீழே இறக்கி விட்டனர்.
கடும் குளிரில், ஆதரவற்ற நிலையில் சாலையில் அவர்களை இறக்கி விடுவதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் அதனை படம் பிடித்தனர். இந்த வீடியோ வெளிவந்து வைரலானது. வயது முதிர்ந்தவர்கள் சாலையில் கீழே கிடப்பதும், சிலரை இறக்கி விடும் காட்சிகளும் அதிர்ச்சி ஏற்படுத்தின.
இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தி கடும் கண்டனம் வெளியிட்டார். இந்த சம்பவத்தில், அதிகாரிகளின் உத்தரவை பின்பற்றும் பணியாளர்களை தண்டிக்காமல் அவர்களுக்கு உத்தரவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டுவிட்டரில் பதிவிட்டார்.
இந்த சம்பவத்திற்கு மத்திய பிரதேச முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் வருத்தம் தெரிவித்ததுடன், உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். இதனையடுத்து நகராட்சி துணை ஆணையாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
அதேவேளையில், முதியவர்கள் அரசு இல்லங்களுக்கு திரும்பி விட்டனர் என பா.ஜ.க. எம்.பி. சங்கர் லால்வானி கூறியுள்ளார். இந்த சம்பவம் பற்றி காங்கிரஸ் எம்.எல்.ஏ. சஞ்சய் சுக்லா போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், ஆதரவில்லாத 10 முதியவர்கள் காணாமல் போயுள்ளனர் என தெரிவித்து உள்ளார்.
எனினும், நகராட்சி ஆணையாளர் பிரதீபா பால் கூறும்பொழுது, குளிர் காலத்தில், இதுபோன்று ஆதரவின்றி சுற்றி திரிபவர்களை மாநகராட்சி பணியாளர்கள் அரசு காப்பகத்திற்கு கொண்டு செல்வார்கள். சிலர் செல்ல தயாராக இருப்பர். ஆனால், ஒரு சிலர் வேறு இடங்களுக்கு சென்று விடுவர் என கூறியுள்ளார். எனினும் இந்த சம்பவம் வருத்தத்திற்குரியது என கூறினார்.
இந்நிலையில், இந்தூர் மாநகராட்சி அதிகாரிகளால் சாலையில் விடப்பட்ட நபர்களில் ஒருவரான தனது கணவரை புஷ்பா என்ற பெண் அடையாளம் கண்டு மீட்டு தனது வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.
இதுபற்றி புஷ்பா கூறும்பொழுது, கடந்த ஜனவரி 3ந்தேதி எனது கணவர் காணாமல் போனார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஒரு நாள் எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் எனது கணவர் இருக்கும் இடம் பற்றி கூறினார். அதனால் அந்த பகுதிக்கு சென்று எனது கணவரை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளேன் என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story