விலை கணிசமாக குறைய வாய்ப்பு: ஜி.எஸ்.டி.யின் கீழ் பெட்ரோல், டீசல் கொண்டுவரப்படுமா? நிர்மலா சீதாராமன் பதில்


விலை கணிசமாக குறைய வாய்ப்பு: ஜி.எஸ்.டி.யின் கீழ் பெட்ரோல், டீசல் கொண்டுவரப்படுமா? நிர்மலா சீதாராமன் பதில்
x
தினத்தந்தி 5 March 2021 11:42 PM GMT (Updated: 5 March 2021 11:42 PM GMT)

ஜி.எஸ்.டி.யின் கீழ் பெட்ரோல், டீசல் கொண்டு வரப்படுமா என்ற கேள்விக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.

புதுடெல்லி, 

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், டெல்லியில் நேற்று இந்திய பெண் பத்திரிகையாளர்கள் சங்கத்தில் பத்திரிகையாளர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சொல்வதில் அர்த்தம் இருக்கிறது. பொதுமக்களின் இந்த சுமையை புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அவற்றின் விலையை நிர்ணயிப்பது சிக்கலான பிரச்சினை ஆகும்.

எனவே நான் தர்மசங்கடமானது என்ற வார்த்தையை பயன்படுத்துகிறேன். இது பற்றி மத்திய, மாநில அரசுகள் பேச வேண்டும். இது மத்திய அரசின் கடமை மட்டுமல்ல. மாநில அரசுகளும் வரிகள் விதிக்கின்றன.

பெட்ரோல், டீசல் மீது விதிக்கிற வரி வருவாயை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்கின்றன. மத்திய அரசு வசூலிக்கிற வரி வருவாயில் 41 சதவீதம் மாநிலங்களுக்கு செல்கிறது. எனவே இவற்றின் விலையை குறைப்பது பற்றிய மத்திய, மாநில அரசுகள்தான் இணைந்து பேசி முடிவு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெட்ரோல், டீசலை சரக்கு, சேவை வரியின் (ஜி.எஸ்.டி.) கொண்டு வருவதுபற்றி நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் பதில் அளிக்கையில், “ஜி.எஸ்.டி. கவுன்சில் இந்த பிரச்சினையை எடுத்துக்கொள்கிறபோது, எடுத்துக்கொள்ளட்டும். விவாதிக்கட்டும். இது ஜி.எஸ்.டி. கவுன்சில் எடுக்க வேண்டிய முடிவு ஆகும்” என்று கூறினார்.

ஜி.எஸ்.டி. வரம்புக்குள் வருகிறபோது, பெட்ரோல் விலை ரூ.75 வரைக்கும், டீசல் விலை ரூ.68 வரைக்கும் குறைய வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் மத்திய மாநில அரசுகளுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படலாம் எனவும், இந்த இழப்பானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.4 சதவீதமாக இருக்கும் எனவும் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

Next Story