வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும் - விவசாய அமைப்பு தலைவர் ராகேஷ் திகாயத் உறுதி


வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும் - விவசாய அமைப்பு தலைவர் ராகேஷ் திகாயத் உறுதி
x

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும் என பாரதிய கிசான் அமைப்பு தலைவர் ராகேஷ் திகாயத் தெரிவித்துள்ளார்.

முசாபர்நகர், 

வேளாண் துறையை சீர்திருத்தும் நோக்கில் 3 புதிய சட்டங்களை மத்திய அரசு கடந்த ஆண்டு நிறைவேற்றியது. இவை விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் எனக்கூறி வரும் அரசு, அவர்களுக்கு சிறந்த வாய்ப்புகளையும் வழங்கும் எனவும் உறுதியுடன் கூறி வருகிறது.

ஆனால் இந்த சட்டங்களால் வேளாண் துறை பெருநிறுவனங்களின் கையில் சென்று விடும் என அச்சம் தெரிவித்து வரும் விவசாயிகள், இந்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என போராடி வருகின்றனர்.

குறிப்பாக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியின் எல்லைகளில் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு 11 சுற்றுகள் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்துக்கு தீர்வு ஏற்படவில்லை.

இதனால் மிகுந்த தீவிரமாக நடந்து வரும் இந்த போராட்டம் நேற்று முன்தினம் 100-வது நாளை கடந்து விட்டது. இதையொட்டி நேற்று உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் நடந்த டிராக்டர் பேரணி ஒன்றை பாரதிய கிசான் அமைப்பு தலைவர் ராகேஷ் திகாயத் தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ‘இந்த 3 சட்டங்களையும் முற்றிலும் திரும்பப்பெற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். அந்தவகையில் எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்’ என்று தெரிவித்தார்.

ராகேஷ் திகாயத் தொடங்கி வைத்த டிராக்டர் பேரணி உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்டில் அனைத்து மாவட்டங்கள் வழியாக பேரணியாக சென்று, வருகிற 27-ந் தேதி டெல்லி காஜிப்பூர் எல்லையில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டக்களத்தை அடையும்.

இதற்கிடையே இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என முசாபர்நகர் தொகுதி எம்.பி.யும், மத்திய மந்திரியுமான சஞ்சீவ் பல்யான் உறுதிபட தெரிவித்துள்ளார். இந்த சட்டங்கள் விவசாயிகளின் விருப்பத்தின் பேரில் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறிய அவர், இந்த புதிய சட்டங்கள் மூலம் எந்தவொரு விவசாயியின் நிலமும் பறிக்கப்பட்டால், தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும் தெரிவித்தார்.

Next Story