பெங்களூருவில் கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் 10 சதவீத படுக்கைகள் ஒதுக்க அரசு உத்தரவு


பெங்களூருவில் கொரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனைகள் 10 சதவீத படுக்கைகள் ஒதுக்க அரசு உத்தரவு
x
தினத்தந்தி 5 April 2021 1:59 AM IST (Updated: 5 April 2021 1:59 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் 10 சதவீத படுக்கைகள் ஒதுக்க உத்தரவிட்டுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் கவுரவ் குப்தா தெரிவித்துள்ளார்.

பெங்களூரு: பெங்களூருவில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் 10 சதவீத படுக்கைகள் ஒதுக்க உத்தரவிட்டுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் கவுரவ் குப்தா தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் மாநகராட்சி கமிஷனர் கவுரவ் குப்தா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

10 சதவீத படுக்கைகள்

பெங்களூருவில் கொரோனா பரவல் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க அரசுடன் சேர்ந்து மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக நகரில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் படுக்கைகள் நிரம்பி விட்டன. இதையடுத்து, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளில் போதிய படுக்கைகள் ஒதுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக தனியார் மருத்துவமனைகளின் உரிமையாளர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு இருந்தது. மேலும் உரிமையாளர்களை அழைத்து ஆலோசனையும் நடத்தப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 10 சதவீத படுக்கைகளை ஒதுக்க தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கை

தற்போது உள்ள சூழ்நிலையில் 10 சதவீத படுக்கைகள் ஒதுக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் தேவைப்பட்டால் கூடுதல் படுக்கைகள் ஒதுக்கவும் தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்படும்.

 முதற்கட்டமாக தனியார் மருத்துவ கல்லூரிகளில் 10 சதவீத படுக்கைகள் ஒதுக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது. ஒரே நேரத்தில் அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் 10 சதவீத படுக்கைகள் ஒதுக்கினால், மற்ற நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் பிரச்சினை ஏற்படும்.

இதனை கருத்தில் கொண்டு முதலில் மருத்துவ கல்லூரிகள், அதன்பிறகு, மருத்துவ கல்லூரிகள் இல்லாத மருத்துவமனைகளில் 10 சதவீத படுக்கைகள் பெறப்படும். கொரோனா பரவலை தடுக்க அரசின் உத்தரவுகளை ஒவ்வொருவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். விதிமுறைகள் மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story