ஒருதலை காதலால் கல்லூரி மாணவியை கொலை செய்த ஆடு மேய்க்கும் வாலிபர்


ஒருதலை காதலால் கல்லூரி மாணவியை கொலை செய்த ஆடு மேய்க்கும் வாலிபர்
x
தினத்தந்தி 6 April 2021 2:56 AM IST (Updated: 6 April 2021 2:56 AM IST)
t-max-icont-min-icon

துமகூரு அருகே ஒருதலை காதலில் அரிவாளால் வெட்டி கல்லூரி மாணவி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக ஆடு மேய்க்கும் வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

பெங்களூரு:

காதலிக்க மறுப்பு

  துமகூரு மாவட்டம் சிரா தாலுகா தொட்டகுல்லு கிராமத்தை சேர்ந்தவர் காவியா (வயது 17). இவர், கல்லூரி ஒன்றில் பி.யூ.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். காவியாவை, அதே கிராமத்தை சேர்ந்த ஈரண்ணா (22) என்பவர் ஒருதலையாக காதலித்துள்ளார். ஆனால் ஈரண்ணாவின் காதலை ஏற்க காவியா மறுத்து விட்டார். கடந்த 6 மாதங்களாக தன்னை காதலிக்கும்படி காவியாவுக்கு ஈரண்ணா வற்புறுத்தி வந்துள்ளார். ஈரண்ணாவை காதலிக்க காவியா மறுத்து விட்டார்.

  இந்த நிலையில், நேற்று காலையில் காவியா வழக்கம் போல கல்லூரிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது காவியாவை வழிமறித்து தன்னை காதலிக்கும்படி ஈரண்ணா வற்புறுத்தி உள்ளார். இதனை ஏற்க மறுத்ததால், ஆத்திரமடைந்த ஈரண்ணா நடு ரோட்டில் வைத்து காவியாவுக்கு தாலி கட்ட முயற்சி செய்ததாக தெரிகிறது. உடனே ஈரண்ணாவிடம் இருந்து தப்பி அவர் ஓடியுள்ளார். சிறிது தூரத்தில் வைத்து காவியாவை மடக்கி பிடித்து மீண்டும் தாலிகட்ட ஈரண்ணா முயன்றுள்ளார்.

மாணவி வெட்டிக்கொலை

  அப்போது காவியா கூச்சலிட்டுள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த ஈரண்ணா தன்னிடம் இருந்த கதிர் அறுக்க பயன்படுத்தும் அரிவாளால் காவியா கண்மூடித்தனமாக வெட்டினார்.

  இதில், பலத்தகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். உடனே அங்கிருந்து அவர் தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்ததும் சிராபுறநகர் போலீசார் விரைந்து சென்று காவியாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

கைது

  அப்போது காதலிக்க மறுத்ததால் காவியாவை ஈரண்ணா கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த ஈரண்ணாவை போலீசாா கைது செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் துமகூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story