பஸ் மோதி பீர் பாட்டில்கள் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்தது; பீர் பாட்டில்களை அள்ளி சென்ற மதுப்பிரியர்கள்


பஸ் மோதி பீர் பாட்டில்கள் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்தது; பீர் பாட்டில்களை அள்ளி சென்ற மதுப்பிரியர்கள்
x
தினத்தந்தி 7 April 2021 8:37 PM GMT (Updated: 7 April 2021 8:37 PM GMT)

ஹாசன் அருகே பீர் பாட்டில்கள் ஏற்றி சென்றபோது பஸ் மோதி சரக்கு வேன் கவிழ்ந்தது. இதனால் அதில் ஏற்றப்பட்டு வந்த 1,920 பீர் பாட்டில்களை மதுப்பிரியர்கள் அள்ளிச்சென்றனர்.

ஹாசன்:

சரக்கு வேன்

  தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் ஒரு தனியார் மதுபான தயாரிப்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அந்த மதுபான தொழிற்சாலையில் இருந்து தலா 12 பீர் பாட்டில்களை கொண்ட 310 பேர் பாட்டில் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் மாலை ஒரு சரக்கு வேன் பெங்களூருவுக்கு புறப்பட்டது.

  அந்த சரக்கு வேன் நேற்று முன்தினம் இரவில் ஹாசன் மாவட்டம் பரகூரு அருகே உள்ள சோதனைச்சாவடி வழியாக பெங்களூருவுக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த சரக்கு வேனுக்கு பின்னால் வந்த ஒரு தனியார் பஸ், எதிர்பாராத விதமாக சரக்கு வேன் மீது மோதியது.

ஆறாக ஓடிய பீர்

  இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சரக்கு வேன் டிரைவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

  ஆனால் சரக்கு வேனில் ஏற்றப்பட்டு வந்த பீர் பாட்டில்கள் அடங்கிய பெட்டிகள் அனைத்து சாலையில் சிதறிக்கிடந்தன. சில பாட்டில்கள் உடைந்து சாலையில் பீர் ஆறாக ஓடியது. இதைப்பார்த்த அப்பகுதி மக்களும், அந்த வழியாக மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்தவர்களும், தங்களால் முடிந்த அளவு பீர்பாட்டில்கள் அடங்கிய பெட்டிகளை தூக்கிச் சென்றுவிட்டனர். அவர்கள் 160 பீர் பாட்டில் பெட்டிகளை தூக்கிச் சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது. அதாவது மொத்தமாக அவர்கள் 1,920 பீர் பாட்டில்களை அள்ளிச் சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

1,800 பீர் பாட்டில்கள் மீட்பு

  இதற்கிடையே இச்சம்பவம் குறித்து அறிந்த ஹாசன் மாவட்டம் கலால் துறையினரும், சென்னப்பட்டணா போக்குவரத்து போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் சம்பவ இடத்தில் குவிந்திருந்த மக்களை விரட்டியடித்தனர். மேலும் அங்கு போக்குவரத்து நெரிசலையும் சீரமைத்தனர். அதையடுத்து சரக்கு வேனில் மீதியிருந்த 150 பீர் பாட்டில் பெட்டிகளை மீட்டனர்.

  அதாவது 1,800 பீர் பாட்டில்களை மீட்டனர். பின்னர் பொக்லைன் எந்திரத்தை கொண்டு வந்து சரக்கு வேனையும் நிலை நிறுத்தினர். போலீசார் நடத்திய விசாரணையில் உரிய அனுமதியுடன் அந்த பீர் பாட்டில்கள் பெங்களூருவுக்கு சரக்கு வேனில் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.

பரபரப்பு

  இதையடுத்து சரக்கு வேன் டிரைவரை போலீசார் சிகிச்சைக்காக ஹாசன் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து சென்னப்பட்டணா போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் நேற்று அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story