18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி திட்டம் இன்று தொடக்கம்; கடும் கட்டுப்பாடுகள் பலன் அளிக்கின்றன முழு ஊரடங்கு தேவையில்லை - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவிப்பு


18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி திட்டம் இன்று தொடக்கம்; கடும் கட்டுப்பாடுகள் பலன் அளிக்கின்றன முழு ஊரடங்கு தேவையில்லை - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவிப்பு
x
தினத்தந்தி 1 May 2021 1:16 AM GMT (Updated: 1 May 2021 1:16 AM GMT)

மராட்டியத்தில் நடைமுறையில் உள்ள கடும் கட்டுப்பாடுகள் பலன் அளிப்பதால் முழு ஊரடங்கை அமல்படுத்தும் கட்டத்தை நாம் அடையவில்லை என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறினார். இருக்கும் மருந்தை வைத்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் இன்று திட்டமிட்டப்படி தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மும்பை, 

நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பு, பலி எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து மும்பை உள்பட மாநிலம் முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வமாக தடுப்பு ஊசி போட்டனர். இதன் காரணமாக மாநிலத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது மாநிலத்தில் குறைந்த எண்ணிக்கையில் தான் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

மேலும் மும்பையில் நேற்றில் இருந்து 3 நாட்களுக்கு தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் போதிய அளவு மருந்து இல்லாததால் 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி மராட்டியத்தில் இன்று (சனிக்கிழமை) தொடங்க வாய்ப்பு இல்லை என்று சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியிருந்தார்.

இந்தநிலையில் முதல்- மந்திரி உத்தவ் தாக்கரே மராட்டிய தினத்தையொட்டி நேற்று இரவு 8.30 மணியளவில் ஆன்லைன் மூலமாக பொதுமக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும் என அதிரடியாக அறிவித்தார். இதேபோல மாநிலத்தில் தற்போதைக்கு முழு ஊரடங்கு தேவையில்லை எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது:-

இந்த காலகட்டத்தில் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 லட்சம் வரை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டது. ஒருவேளை கடுமையான கட்டுப்பாடு இல்லையெனில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 9 லட்சம் முதல் 10 லட்சமாக உயர்ந்து இருக்கலாம். ஆனால் தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை சுமார் 6.5 லட்சமாக தான் உள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள கடுமையான கட்டுப்பாடுகள் பலன் அளிக்கின்றன. முழு ஊரடங்கு அவசியமாக இருக்கலாம். ஆனால் தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டிய நிலைக்கு நாம் இன்னும் சென்றுவிடவில்லை என நினைக்கிறேன். கடந்த ஆண்டை போல இந்த அலையையும் நாம் ஒற்றுமையுடன் எதிர்த்து போராடுவோம்.

மாநிலத்தில், 18 வயது முதல் 44 வயது வரை உள்ள 6 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட நம்மால் ஒரே தவணையில் காசோலை கொடுத்து 12 கோடி தடுப்பு மருந்தை வாங்க முடியும். ஆனால் அந்தளவுக்கு மருந்து இல்லை. நமது நாட்டில் சில நிறுவனங்கள் மட்டும் கொரோனா தடுப்பு மருந்தை உற்பத்தி செய்கின்றன. வேறு சில நிறுவனங்களுடனும் நாங்கள் பேசி வருகிறோம்.

இந்த மாதத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட நமக்கு 18 லட்சம் தடுப்பு மருந்துகள் தான் கிடைக்கும். எனினும் கையில் இருக்கிற மருந்தை வைத்து கொண்டு இன்று (சனிக்கிழமை) முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடங்கும். நமக்கு வெள்ளிக்கிழமை (நேற்று) 3 லட்சம் தடுப்பு மருந்து டோஸ்கள் கிடைத்து உள்ளது. எனவே இளைஞர்கள் நேரடியாக மையங்களுக்கு செல்வதை தவிர்த்து, முன்பதிவு செய்து தடுப்பூசி போட வேண்டும்.

ஜூலை மாதத்தில் தடுப்பு மருந்து சப்ளை அதிகரிக்கும். 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டு முடிக்கும் திறன் மாநில அரசுக்கு உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இதேபோல மாநிலத்தில் சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் டாக்டர்கள், நர்ஸ்களை நாம் எங்கு இருந்து கொண்டு வர முடியும்?.

நமக்கு ஆக்சிஜன் பற்றாக்குறையும் உள்ளது. தினமும் நாம் 1,200 டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்கிறோம். ஆனால் 1,700 டன் பயன்படுத்துகிறோம். சுமார் 500 டன் ஆக்சிஜனை மத்திய அரசிடம் இருந்து பெறுகிறோம். அடுத்த கொரோனா அலைக்கும் நாம் தயாராகி வருகிறோம். ஆனால் அது பெரிய அலையாக இருக்கக்கூடாது என நினைக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கப்பட்டாலும், மருந்து தட்டுப்பாடு காரணமாக பெயரளவில் தான் அந்த பணி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story