கொரோனா பரவல் அதிகரிப்பு: மாவட்ட அளவில் நடவடிக்கை எடுக்க 7 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை
2 வாரங்களாக பாதிப்பு விகிதம் அதிகரித்துள்ள நிலையில் மாவட்ட அளவில் நடவடிக்கை எடுக்க 7 மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா பரவல் பொதுவாக கட்டுக்குள் இருக்கிறது. ஆனாலும்கூட, 7 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் குறிப்பிட்ட மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களாக பாதிப்பு விகிதம் 5 முதல் 10 சதவீதம் உள்ளது. இந்த 7 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பட்டியலில் கேரளா, மிசோரம், அருணாசலபிரதேசம், புதுச்சேரி, மணிப்பூர், மேற்கு வங்காளம், நாகாலாந்து ஆகியவை உள்ளன.
இந்த மாநிலங்களுக்கும். யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு சார்பில் சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியுள்ள முக்கிய விஷயங்கள் வருமாறு:-
* கேரளா, மிசோரம், அருணாசலபிரதேசம், புதுச்சேரி, மணிப்பூர், மேற்கு வங்காளம் மற்றும் நாகாலாந்தில் 19 மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களாக பாதிப்பு விகிதம் 5 முதல் 10 சதவீதம் வரை உள்ளது.
* மிசோரம், கேரளா, சிக்கிமில் உள்ள 8 மாவட்டங்களில் கடந்த 2 வாரங்களாக பாதிப்பு விகிதம் 10 சதவீதத்துக்கு அதிகமாக உள்ளது.
* ஆக இந்த 27 மாவட்டங்களும் மிக உன்னிப்பாக கண்காணிக்கப்பட வேண்டும். அந்த வகையில், புதிய கொத்து பரவலை (கிளஸ்டர் பரவல்) கடடுப்படுத்துவதற்கு மாவட்ட அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* எந்த மாவட்டத்திலாவது பாதிப்போ, பாதிப்பு விகிதமோ அதிகரித்தால் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளூர் அளவில் கட்டுப்பாட்டு மண்டலங்களை ஏற்படுத்த வேண்டும்.
* பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும்.
* கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகள் எல்லா இடங்களிலும், எல்லா நேரங்களிலும் கண்டிப்புடனும் பின்பற்றப்பட வேண்டும். தீவிரமாக கண்காணிக்கப்படவும் வேண்டும்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story