தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஆறுதல் செய்தி...!! ஒமைக்ரான் குறுகிய அலை, வேகமாக பரவுவுவது போல் குறையும்
ஒமைக்ரானால் மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலையோ மரணமோ அதிகமாக ஏற்படவில்லை
புதுடெல்லி
முதன்முதலாக தென் ஆப்பிரிக்க விஞ்ஞானிகளால் கடந்த நவம்பர் 25 ஆம் தேதியன்று உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. இதுவரை ஒமைக்ரான் வைரஸ் 106 நாடுகளில் பரவியுள்ளது. பிரிட்டன், டென்மார்க், போர்ச்சுகல் போன்ற ஐரோப்பிய நாடுகளில் அன்றாட தொற்று எண்ணிக்கை அச்சுறுத்தும் அளவுக்கு உள்ளது.
இந்தியாவில் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 236 ஆக அதிகரித்துள்ளது. மராட்டிய மாநிலம் - 65, டெல்லி - 64, தமிழ்நாடு -34, தெலங்கானா - 24, ராஜஸ்தான் - 21, கர்நாடகா - 19, கேரளா - 15, குஜராத் - 14, ஜம்மு-காஷ்மீர் - 3, ஒடிசா -2, உத்தரப்பிரதேசம் - 2, ஆந்திரா - 2, சண்டிகர் - 1, லடாக் - 1, மேற்கு வங்காளம் - 1, உத்தரகாண்ட் - 1, ஆகியோருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் பரவல் குறையத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து அந்நாட்டு சுகாதாரத் துறை நிபுணர்கள், கடந்த நவம்பர் 26 ஆம் தேதி ஒமைக்ரான் முதன்முதலாகக் கண்டறியப்பட்டது.
அதன்பிறகு கொரோனா தொற்று எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்தது. இப்போது அது படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது. ஒமைக்ரான் அலை உச்சத்தைத் தொட்டு சரிவதாகக் கருதுகிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.
டிசம்பர் 16 ஆம் தேதியன்று 27,000 ஆக இருந்த ஒமைக்ரான் தொற்று டிசம்பர் 21ல் 15,424 ஆகக் குறைந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் ஒமைக்ரான் தொற்று உறுதியான மையப்புள்ளியாகக் கருதப்பட்ட காடெங் மாகாணம், ஜோஹனஸ்பெர்க், ப்ரிடோரியா ஆகிய பகுதிகளில் அன்றாட பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது.
ஒமைக்ரான் எண்ணிக்கை குறைந்தது குறித்து தென் ஆப்பிரிக்காவின் விட்வாட்ஸ்ரேண்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி, தொற்று நோய்கள் ஆராய்ச்சித் துறை மூத்த ஆராய்ச்சியாளர் மார்டா நூன்ஸ் கூறியதாவது:-
கவ்டென் மாகாணத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது. இந்தப் பகுதிதான் சமீப காலமாக தொற்றின் மையப்புள்ளியாக இருந்தது. இந்நிலையில் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. இது உண்மையில் ஒரு குறுகிய அலை. இதில் நல்ல செய்தி என்னவென்றால் ஒமைக்ரானால் மருத்துவமனையில் அனுமதிக்கும் நிலையோ மரணமோ அதிகமாக ஏற்படவில்லை. தொற்று நோய்ப் பரவல் வரலாற்றில் எப்போது நோய்ப் பரவல் உச்சம் தொடுகிறதோ அதிலிருந்து அது மீண்டும் படுவேகத்தில் குறைவது இயல்பே" என கூறினார்.
தென் ஆப்பிரிக்க தேசிய தொற்று நோய்கள் ஆராய்ச்சி மையத்தின் அறிக்கையில், "மற்ற உருமாறிய கரோனா வைரஸ்களை ஒப்பிடும் போது ஒமைக்ரானால் மருத்துவமனையில் அனுமதியாகும் ஆபத்து 80% குறைவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story