நொய்டாவில் இரட்டை கோபுரம் வெடி வைத்து தகர்க்க முடிவு

'உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் விதிகளை மீறி கட்டப்பட்ட பிரமாண்ட இரட்டை கோபுர வீடுகள் மே 22ல், ஒன்பது நிமிடங்களில் தரைமட்டமாக்கப்படும்' என, அதிகாரி தெரிவித்தார்.
நொய்டா,
டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்ட சூப்பர்டெக் நிறுவனம், உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் 31, 32 மாடிகளைக் கொண்ட இரண்டு பெரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்களை கட்டியது. இரண்டு கட்டடங்களில் 633 குடியிருப்புகளுக்கு சூப்பர்டெக் நிறுவனம் முன்பணம் பெற்றுள்ளது. இந்நிலையில், வீட்டிற்கு முன்பணம் செலுத்தும் போது காட்டிய வரைபடத்திற்கும், கட்டடம் கட்டப்பட்டதற்கும் வித்தியாசம் உள்ளதாக குடியிருப்போர் நலச் சங்கம், சூப்பர்டெக் நிறுவனம் மீது அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதனை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், இந்த கட்டடங்கள் விதிமுறைகள் மீறி கட்டப்பட்டுள்ளதால், இரட்டை கோபுர குடியிருப்புகளை இடிக்க கடந்த 2014-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து கட்டுமான நிறுவனம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கட்டடத்தை இடிக்க கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. மறுஆய்வு மனுவையும் உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, கட்டடத்தைத் தகர்க்கும் பொறுப்பு மும்பையை சேர்ந்த எடிஃபைஸ் இன்ஜினீயரிங் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி இந்நிறுவனம் தகர்ப்புப் பணியை மேற்கொள்ளும் என்று கூறப்பட்டது. இந்நிலையில், வருகிற மே மாதம் 22-ம் தேதி மதியம் 2.30 மணியளவில் இந்த இரட்டை கோபுர கட்டடங்கள், 9 விநாடிகளில் இடிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக, 2,500 மற்றும் 4,000 கிலோ வெடி மருந்துகள் பயன்படுத்தப்பட உள்ளன. ஒன்பது நிமிடங்களில் இரண்டு கோபுரங்களும் இடிந்து தரைமட்டமாகும்.அன்றைய தினம், இரட்டை கோபுரத்தை சுற்றியுள்ள 1,500 குடும்பத்தினர் அப்புறப்படுத்தப்படுவர்.
நொய்டா - கிரேட்டர் நொய்டா விரைவு நெடுஞ்சாலையில் சில மணி நேரங்கள் போக்குவரத்து நிறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story