சுயசார்புடன் இருப்பது அவசியம் என சுட்டி காட்டிய ரஷியா-உக்ரைன் போர்; ராஜ்நாத் சிங் பேச்சு
ரஷியா-உக்ரைன் போர் நாம் யாரையும் சார்ந்திராமல் சுயசார்புடன் இருக்க வேண்டியது முக்கியத்துவம் வாய்ந்த விசயம் என்று மீண்டும் சுட்டி காட்டியுள்ளது என ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் பாதுகாப்பு அலுவலக வளாகத்தில் இன்று நடந்த கடற்படை தளபதிகளுக்கான மாநாட்டில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று கலந்து கொண்டார். அவர் பேசும்போது, ரஷியா-உக்ரைன் போரானது யாரையும் சார்ந்திராமல் சுயசார்புடன் இருக்க வேண்டியது முக்கியத்துவம் வாய்ந்த விசயம் என்று நமக்கு மீண்டும் சுட்டி காட்டியுள்ளது.
அரசின் ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின் கீழ் செயல்படுவதில் முன்னணியில் உள்ள இந்திய கடற்படை தொடர்ந்து அதில் பயணிக்க வேண்டும்.
கடந்த முறை நடந்த தளபதிகள் மாநாட்டில் இருந்து, பி15பி திட்டத்தின் கீழான ஐ.என்.எஸ். விசாகப்பட்டினம் என்ற முதல் கப்பல், ஐ.என்.எஸ். வேலா என்ற நான்காவது பி75 நீர்மூழ்கி கப்பல் மற்றும் கோவாவின் ஐ.என்.எஸ். ஹன்சா கடற்படை தளத்தில் இருந்து செயல்பட கூடிய கடற்படையின் இரண்டாவது பி8ஐ ஸ்குவாட்ரன் ஐ.என்.ஏ.எஸ். 316 ரக போர் விமானம் ஆகிய பெரிய கடற்படை பிரிவுகளை இயக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வரும் கடற்படையை நான் வெகுவாக பாராட்டியே ஆக வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்திய கடற்படையானது, வெளிநாட்டு அதிகாரிகளுருக்கும் இந்தியாவில் பயிற்சி வழங்கியுள்ளது. கடந்த 4 தசாப்தங்களில் 45 நட்பு நாடுகளை சேர்ந்த 19 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் நமது நாட்டில் பயிற்சி பெற்றுள்ளனர் என அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story