மோடி அரசுக்கு ஆதரவாக முன்னாள் நீதிபதிகள், அதிகாரிகள் கடிதம்
மோடி அரசை விமர்சித்து கடிதம் எழுதிய முன்னாள் ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். அதிகாரிகளுக்கு பதிலடியாக முன்னாள் நீதிபதிகள், அதிகாரிகள் ஒரு திறந்த கடிதம் வெளியிட்டுள்ளனர்.
புதுடெல்லி,
பிரதமர் மோடிக்கு கடிதம்
முன்னாள் ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். அதிகாரிகளை கொண்ட ‘சி.சி.ஜி.’ என்னும் அரசியல் சாசன நடத்தைக்குழு பிரதமர் மோடிக்கு கடந்த 26-ந் தேதி ஒரு திறந்த கடிதம் எழுதியது. அந்தக் கடிதத்தில், முஸ்லிம் மற்றும் சிறுபான்மை சமூகத்தை குறிவைக்கும் வெறுப்புணர்வு அரசியல் அதிகரித்து வருவது பற்றியும், அரசியல் சாசனத்தின் அடிப்படை கொள்கைகளை தொடர்ந்து மீறுவது குறித்தும் கவலை தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், அந்த கடிதத்தில் அசாம், டெல்லி, குஜராத், அரியானா, கர்நாடகம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் போன்ற பல மாநிலங்களில் கடந்த சில ஆண்டுகளாக சிறுபான்மை சமூகத்தினர் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து இருப்பதை சுட்டிக்காட்டி தங்கள் கோபத்தையும், வேதனையையும் வெளிப்படுத்தி உள்ளனர். மேற்கண்ட மாநிலங்களில் டெல்லி தவிர்த்து பிற மாநிலங்கள் அனைத்திலும் பா.ஜ.க. ஆட்சிதான் நடக்கிறது என்பதுவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெறுப்புணர்வு அரசியலுக்கு முடிவு
இந்த கடிதத்தில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளான அனிதா அக்னிகோத்ரி, சலாகுதீன் அகமது, எஸ்.பி.அம்புரோஸ், ஆனந்த் ஆர்னி, அருணா பாக்சீ, சந்தீப் பாக்சீ உள்ளிட்ட 108 பேர் கையெழுத்து போட்டுள்ளனர்.
கடிதத்தின் முடிவில், இந்த மாபெரும் சமூக அச்சுறுதல் குறித்து தனது மவுனத்தை பிரதமர் கலைக்க வேண்டும், பா.ஜ.க. அரசுகள் கடைப்பிடிக்கும் வெறுப்புணர்வு அரசியலை முடிவுக்கு கொண்டு வரவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பதிலடியாக ஒரு கடிதம்
இந்த கடிதத்துக்கு பதில் அளிக்கிற வகையில் 8 முன்னாள் நீதிபதிகள், 97 முன்னாள் அதிகாரிகள், 92 முன்னாள் பாதுகாப்பு படை அதிகாரிகள் அடங்கிய குழு தங்களை ‘அக்கறையுள்ள குடிமக்கள்’ என்று அழைத்துக்கொண்டு, பிரதமர் மோடிக்கு ஒரு திறந்த கடிதம் எழுதி ஆதரவு காட்டி உள்ளனர்.
அந்த கடிதத்தில் அவர்கள் கூறியுள்ள முக்கிய அம்சங்கள்:-
* அவர்களின் கோபமும், வேதனையும் வெற்று நல்லொழுக்கம் மட்டுமல்ல, அவர்கள் தற்போதைய அரசுக்கு எதிரான வெறுப்புணர்வின் மீது உள்ளபடியே எண்ணெய் ஊற்றுகிறார்கள். வெறுப்புணர்வை தூண்டுகிறார்கள்.
* அந்த திறந்த கடிதம், ஒரே மொழியைத்தான் திரும்பத்திரும்ப சொல்கிறது. ஒரு பக்க சார்பான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
* இது பிரச்சினைகளுக்கு அவர்களின் இழிவான, கொள்கையற்ற அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது.
* பா.ஜ.க. அரசின் கீழ் பெரிய வகுப்புவாத வன்முறை சம்பவங்கள் குறைந்துள்ளன. இது பொதுமக்களால் பாராட்டப்படுகின்றன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story