கர்நாடக மந்திரிசபை நாளை மாற்றியமைக்க உள்ளதாக தகவல்

கர்நாடக மந்திரிசபை நாளை மாற்றியமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு(2023) நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று பா.ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது.
இதற்காக 150 தொகுதிகளில் வெற்றிபெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலையொட்டி மந்திரிசபை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
சட்டசபை தேர்தலையொட்டி மூத்த மந்திரிகளை நீக்கிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கவும், மந்திரிசபையை மாற்றியமைக்கவும் பா.ஜனதா மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மந்திரிசபை விரிவாக்கம் குறித்து பேசுவதற்காக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கடந்த 2 மாதங்களாக 3 முறை டெல்லிக்கு சென்றிருந்தார். கடந்த 11-ந் தேதி டெல்லிக்கு சென்ற அவர், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து பேசி இருந்தார்.
இதற்கிடையில், ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பங்கேற்க மேலிட பொறுப்பாளர் அருண்சிங் பெங்களூருவுக்கு வந்துள்ளர். அவர், வருவதற்கு முன்பாக ஒருங்கிணைப்பு கூட்டம் தொடங்குவதற்கு முன்பு பா.ஜனதா தலைவர்களுடன் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை ஆலோசனை நடத்தியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.
அதாவது மந்திரிசபை மாற்றியமைப்பு குறித்து 4 நாட்களில் தகவல் அனுப்புவதாக அமித்ஷா கூறி இருந்ததால், கட்சியின் மூத்த தலைவர்களுடன் பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
அமித்ஷா கூறி 4 நாட்கள் ஆகி விட்டதாலும், அதே நேரத்தில் மேலிட பொறுப்பாளர் அருண்சிங்கும் பெங்களூருவுக்கு வந்திருப்பதாலும், கர்நாடக மந்திரிசபை நாளை(திங்கட்கிழமை) மாற்றியமைக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
பா.ஜனதா மேலிடத்திடம் இருந்து இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மேலிடத்தின் அனுமதிக்காக முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை மற்றும் தலைவர்கள் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Related Tags :
Next Story