ரூ.3½ லட்சம் ரொக்கம், 7½ டன் அரிசி பறிமுதல்

சிக்கமகளூவில் முறையான ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.3½ லட்சம் பணம் மற்றும் 7½ டன் அரிசியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சிக்கமகளூரு:-
பரிசு பொருட்கள்
கர்நாடகத்தில் வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலையொட்டி, காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றன. மேலும் வாக்காளர்களை கவரும் நோக்கில் சில இடங்களில் அரசியல் கட்சியினர் தரப்பில் பரிசு பொருட்களும் வழங்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனை தடுக்க அரசு அதிகாரிகள், போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக ஆங்காங்கே சோதனை சாவடிகள் அமைத்து முறையான ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பொருட்களை போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
ரூ.3½ லட்சம் பறிமுதல்
இந்நிலையில் நேற்று சிக்கமகளூருவில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் அரிசி மூட்டைகள் மற்றும் கட்டுக்கட்டாக பணம் பிடிபட்டுள்ளது. இதற்காக தரிகெரே தாலுகா எம்.சி.கேம்ப் பகுதியில் லக்குவள்ளி போலீசார் சோதனை சாவடி அமைத்திருந்தனர். அப்போது அவர்கள் ஒவ்வொரு வாகனங்களையும் சோதனை செய்து, அனுப்பி வைத்தனர். அப்போது தரிகெரேவில் இருந்து வந்த கார் ஒன்றை போலீசார் சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
இந்த சோதனையில், காரில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ரூ.3½ லட்சம் வரை மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அந்த பணத்திற்கான ஆவணங்களை போலீசார் கேட்டனர். ஆனால் காரில் வந்தவர் தன்னிடம் அந்த பணத்திற்கான ஆவணங்கள் இல்லை என்று கூறிவிட்டார். இதையடுத்து அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து லக்குவள்ளி போலீசார் வழக்குப்பதிவு ெசய்தனர்.
7½ டன் அரிசி
இதேபோல அதே சோதனை சாவடியில், லாரி ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக தலா 50 கிலோ எடை அளவில் 150 அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்த 7½ டன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவங்கள் குறித்து லக்குவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.