பிரவீன் நெட்டார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 3 பேர் கைது


பிரவீன் நெட்டார் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 3 பேர் கைது
x

பா.ஜனதா பிரமுகர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். வாலிபர் கொலைக்கு பழிக்கு பழியாக தீர்த்துக்கட்டினர்.

மங்களூரு;

பா.ஜனதா பிரமுகர் கொலை

தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரே அருகே நெட்டாரு பகுதியை சேர்ந்தவர் பிரவீன் நெட்டார். பா.ஜனதா பிரமுகரான இவர், கடந்த ஜூலை 26-ந் தேதி இரவு படுகொலை செய்யப்பட்டார். பிரவீன் நெட்டாரின் இறுதி ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது. இந்த கொலை சம்பவத்தால் அதிருப்தி அடைந்த பா.ஜனதா பிரமுகர்கள், தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

மேலும் கொலையாளிகளை கைது செய்யக்கோரி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதன் எதிரொலியாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் ஓராண்டு சாதனை விளக்க மாநாடு ரத்து செய்யப்பட்டது. இதற்கிடையே மசூத், முகமது பாசில் ஆகிய 2 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

தொடர் கொலைகளால் தட்சிண கன்னடாவில் பதற்றம் ஏற்பட்டது. இதனால் 144 தடை உத்தரவு, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பலத்த போலீசார் குவிக்கப்பட்டனர். இதில் பிரவீன் நெட்டார் கொலை சம்பவம் குறித்து பெல்லாரே போலீசார் வழக்குப்பதிவு செய்துகொண்டனர். மேலும் 6 தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை வலைவீசி தேடிவந்தனர்.

அதன்படி பிரவீன் நெட்டார் கொலை வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் கொலையில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இதனால் முக்கிய குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

3 பேர் கைது

இந்த நிலையில் பிரவீன் நெட்டார் கொலையில் முக்கிய குற்றவாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபற்றி மாநில சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமார், தட்சிண கன்னடா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பா.ஜனதா பிரமுகர் பிரவீன் நெட்டார் கொலையில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணையில், அவர்கள் பெல்லாரே பகுதியை சேர்ந்த சியாப், ரியாஜ் மற்றும் பசீர் ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் 3 பேரும், கேரளாவில் பதுங்கி இருந்தபோது போலீசில் பிடிபட்டனர்.

பழிக்கு பழி

கடந்த மாதம்(ஜூலை) மசூத் என்பவர் கத்தியால் குத்தப்பட்டு ஜூலை 21-ம் தேதி மங்களூரு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதே நாளில் அந்தபகுதியில் யாராவது ஒரு நபரை கொலை செய்ய கொலையாளிகள் திட்டம் தீட்டியுள்ளனர். அதன்படி பா.ஜனதா பிரமுகர் பிரவீன் நெட்டாரை கொலை செய்ய தேர்ந்தெடுத்தனர். இதற்காக பிரவீன் நெட்டாரை தினமும் மறைமுகமாக நோட்டம் பார்த்துள்ளனர்.

ஆனால் பிரவீன் நெட்டாரை சுற்றி எப்போதும் ஆட்கள் இருந்ததால் அவரை கொலை செய்வதில் தாமதம் ஏற்படுத்தி, பின்னர் 26-ந்தேதி இரவில் பிரவீன் தனியாக வீட்டிற்கு சென்றபோது வழிமறித்து கொலை செய்துள்ளனர். பின்னர் குற்றவாளிகள், கேரளாவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று தலைமறைவாகி உள்ளனர்.

இதைதொடர்ந்து போலீசிடம் சிக்காமல் இருக்க கேரளாவில் தலச்சேரி கண்ணூர், மலப்புரம் உள்ளிட்ட 7 இடங்களுக்கு 15 நாட்களில் கார் உள்ளிட்ட வாகனம் முலம் இடமாற்றி வந்துள்ளனர். கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின்போது அவருடன் தட்சிண கன்னடா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரிஷிகேஷ் சோனாவனே பகவான், மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. தேவஜோதி ராய் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story