சிக்கமகளூருவில் 10 நாட்களில் ரூ.9 கோடி தங்க நகைகள் பறிமுதல்
சிக்கமகளூருவில் தேர்தல் நடத்தை விதிமுறையையொட்டி கடந்த 10 நாட்களில் ரூ.9 கோடி தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக கலெக்டர் ரமேஷ் கூறியுள்ளார்.
சிக்கமகளூரு:-
ரூ.9 கோடி தங்க நகை
சிக்கமகளூரு மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறையையொட்டி போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பல லட்சம் ரூபாய் பணம், பரிசு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று இது குறித்து மாவட்ட கலெக்டர் ரமேஷ் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:-
சிக்கமகளூரு மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் 22 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. சிக்கமகளூரு மாவட்டத்திற்கு வரும் வாகனங்கள் மற்றும் மாவட்டத்தில் இருந்து வெளியே செல்லும் வாகனங்கள் சோதனைக்கு பின்னரே அனுப்பி வைக்கப்படுகிறது.
நேற்று முன்தினம் தரிகெரே எம்.சி.ஹள்ளி பகுதியில் நடந்த வாகன சோதனையில் ரூ.6 கோடி மதிப்பிலான தங்கம், பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அதன்படி கடந்த 10 நாட்களில் மட்டும் ரூ.9 கோடி தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.
பேனர், போஸ்டர் ஒட்ட அனுமதி
இந்த தங்க நகைகள் அனைத்தும் முறையான ஜி.எஸ்.டி செலுத்தாமல் எடுத்து சென்றவை. ஆவணங்கள் இல்லை என்றதும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. தேர்தல் முடிந்த பின்னர்
சரியான ஆவணங்களை காண்பித்தால், இந்த நகைகள் திரும்ப வழங்கப்படும். இதேபோல அரசியல் கட்சிகள் பிரசாரம், பொது கூட்டம் நடத்துவதற்கு முன் அனுமதி பெறவேண்டும். எங்கெங்கு பேனர்கள், போஸ்டர்கள், வரைப்படங்கள் வைக்கப்படுகிறோதோ, அது குறித்து தகவல் உடனே மாவட்ட நிர்வாகத்திற்கு வரவேண்டும்.
மேலும் அதற்கு அனுமதி பெறவேண்டும். அனுமதியின்றி பேனர், போஸ்டர் ஒட்டுபவர்கள், நோட்டீஸ் வினியோகம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பணம், பரிசு பொருட்கள் வினியோகம் செய்வது சட்டப்படி குற்றம். அதேபோல பொது மக்களும் பணம், பரிசு பொருட்களை வாங்காமல், வாக்களிக்கவேண்டும். ஒவ்வொரு வாக்கும் பொன் போன்றது. இதை வாக்காளர்கள் சரியாக பயன்படுத்தவேண்டும். யாரும் வாக்களிக்க தவற கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.