ஜம்மு-காஷ்மீரில் சுரங்கபாதை விபத்து: 3 பேர் காயம்; 10 பேர் மாயம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்த விபத்தில் 10 தொழிலாளர்கள் மாயமாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு,
ஜம்மு காஷ்மீர் ராம்பன் மாவட்டத்தில் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் கட்டுமானத்தில் இருந்த சுரங்கப்பாதையின் ஒரு பகுதி நேற்று இரவு 10.15-க்கு திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், சுமார் 10 தொழிலாளர்கள் காணவில்லை, என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
சுரங்கப்பாதை சுற்றிலும் இடிபாடுகள் இருப்பதால் சிக்கியவர்கள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூனி நல்லா ரம்பன் அருகே உள்ள அஜித் சுரங்கப்பாதையில் சுமார் 12-க்கும் மேற்பட்ட சர்லா நிறுவனத்தின் தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். விபத்து நடைபெற்ற இடத்தில் உடனே மீட்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டது.
இதையடுத்து, மூன்று பேர் இன்று காலை மீட்கப்பட்டு ராம்பன் மாவட்ட மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அதில் ஒருவர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த விஷ்ணு கோலா (33) என்று தெரிய வந்தது. அவர் மேல் சிகிச்சைக்காக ஜிஎம்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஜம்மு சுரங்கப்பாதை சரிந்த இடத்தில் 9 பேர் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருந்த நிலையில் ஒரு உடல் மீட்கப்பட்டது. காயமடைந்த 3 பேர் நேற்று வெளியேற்றப்பட்டனர். மேலும், அப்பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்க, அப்பகுதியில் பாறை உடைக்கும் கருவிகள் பயன்படுத்தப்படுவதால் அதிக நேரம் எடுக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
காணாமல் போனவர்கள் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஜாதவ் ராய்(23), கௌதம் ராய்(22), சுதிர் ராய்(31), தீபக் ராய்(33), பரிமல் ராய்(38), அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சிவ சௌகான்(26), நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் நவராஜ் சௌத்ரி(26) மற்றும் குஷி ராம்(25), உள்ளூர் வாசிகளான முசாபர்(38), இஸ்ரத்(30) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.