வாலிபரை கத்தியால் குத்திவிட்டு 2-வது மாடியில் இருந்து குதித்து நண்பர் தற்கொலை முயற்சி
வாலிபரை கத்தியால் குத்திவிட்டு 2-வது மாடியில் இருந்து குதித்து நண்பர் தற்கொலை முயற்சி செய்தார்.
பெங்களூரு: பெங்களூரு பேகூரு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ரோகித் (வயது 28). இவருடன் நண்பர்களான கேகா உள்பட 4 பேரும் வசித்து வருகின்றனர். இவர்கள் 5 பேரும், சமையல் வேலை செய்து வந்தனர். நேற்று முன்தினம் குடியிருப்பு வீட்டில் தனியாக இருந்த ரோகித், கேகா இடையே சாதாரண பிரச்சினைக்கு தகராறு ஏற்பட்டது. அப்போது திடீரென்று ஆத்திரமடைந்த கேகா வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ரோகித்தை குத்தினார். இதில், பலத்தகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதனால் செய்வது அறியாமல் திகைத்த கேகா வீட்டின் 2-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கும் பலத்தகாயம் ஏற்பட்டது.
பின்னர் உயிருக்கு போராடிய ரோகித், கேகா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களது உயிருக்கு ஆபத்தில்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். சாதாரண பிரச்சினையில் நண்பரை கத்தியால் குத்திக் கொல்ல முயன்றதுடன், மாடியில் இருந்து குதித்து கேகா தற்கொலைக்கு முயன்றது தெரிந்தது. இதுகுறித்து பேகூரு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.