20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு

பெங்களூருவில், மேம்பால தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 20 அடி உயரத்தில் இருந்து தவறி சாலையில் விழுந்த வாலிபர் உயிரிழந்த சம்பவம் நடந்து உள்ளது.
பெங்களூரு:
வாலிபர் சாவு
ஆந்திராவை சேர்ந்தவர் நாகார்ஜூன்(வயது 33). இவர் பெங்களூருவில் தங்கி இருந்து தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் நாகார்ஜூன் மோட்டார் சைக்கிளில் பெங்களூருவில் இருந்து ஓசூருக்கு சென்று கொண்டு இருந்தார். அவர் எலெக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது நாகார்ஜூனின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தறிகெட்டு ஓடி மேம்பால தடுப்பு சுவரின் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட நாகார்ஜூன் 20 அடி உயரத்தில் இருந்து சாலையில் தவறி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த நாகார்ஜூன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
போக்குவரத்து பாதிப்பு
இந்த விபத்து குறித்து அறிந்ததும் எலெக்ட்ரானிக் சிட்டி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாகார்ஜூனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக இணைப்பு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு உண்டானது. இதனை போலீசார் சீர்செய்தனர். விபத்து குறித்து எலெக்ட்ரானிக் சிட்டி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.எலெக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் உள்ள லே-பே என்ற வாகன நிறுத்தும் இடத்தில் கடந்த ஆண்டு(2021) மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் மேம்பாலத்தில் இருந்து இணைப்பு சாலையில் தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த இளம்பெண் உள்பட 2 பேர் உயிரிழந்து இருந்தனர்.