'இந்தியா முழுவதும் என் வீடுதான்' அரசு பங்களா மீண்டும் ஒதுக்கப்பட்டது குறித்து ராகுல் காந்தி கருத்து

ராகுல் காந்தி சுமார் 20 ஆண்டுகளாக வசித்து வந்த டெல்லி துக்ளக் சாலையில் உள்ள அரசு பங்களாவை காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
புதுடெல்லி,
அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடந்த மார்ச் மாதம் சூரத் கோர்ட்டு தீர்ப்பளித்தது. அதன் அடிப்படையில் எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதனால் ராகுல் காந்தி சுமார் 20 ஆண்டுகளாக வசித்து வந்த டெல்லி துக்ளக் சாலையில் உள்ள அரசு பங்களாவை காலி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதனிடையே அவதூறு வழக்கில் சூரத் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு 2 ஆண்டுகால சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்த உத்தரவை மக்களவை செயலகம் நேற்று முன்தினம் திரும்பப்பெற்றது. இந்த நிலையில் ராகுல் காந்தி முன்பு வசித்து அதே அரசு பங்களா அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து ராகுல் காந்தியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "இந்தியா முழுவதும் என் வீடு தான்" என அவர் பதிலளித்தார்.