விவசாயத்துறை வளர்ச்சி அடைந்தாலும் விவசாயிகள் பொருளாதார பலம் பெறவில்லை; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு


விவசாயத்துறை வளர்ச்சி அடைந்தாலும் விவசாயிகள் பொருளாதார பலம் பெறவில்லை; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு
x

விவசாயத்துறை வளர்ச்சி அடைந்தாலும் விவசாயிகள் பொருளாதார பலம் பெறவில்லை என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.

பெங்களூரு:

மந்திரிகள் மாநாடு

மத்திய அரசின் விவசாயத்துறை சார்பில் அனைத்து மாநில விவசாய மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் மாநாடு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்துகொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-

பிரதமர் மோடி விவசாயத்துறை தன்னிறைவு அடைய வேண்டும் என்று விரும்புகிறார். உணவு தானிய தேவையில் நாம் பிறரை சார்ந்து இருப்பதை தவிர்த்து நாமே நம்மை நம்பி இருக்க வேண்டும். மேலும் நாம் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். விவசாயத்துறை நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் உள்நாட்டு உற்பத்தியை தீர்மானிக்க கூடிய துறையாக மாறியுள்ளது.

பொருளாதார பலம்

இதில் கர்நாடகம் அதிகமாக தனது பங்களிப்பை அளிக்கிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் விவசாயத்துறை முன்னணியில் உள்ளது. விவசாயத்துறை வளர்ச்சி அடைந்தால் நாடு பலமடையும். நாட்டின் முதுகெலும்பான விவசாயிகள் பொருளாதார ரீதியாக பலம் பெற்றால் அதனால் நாடும் வளர்ச்சி அடையும். விவசாயிகளின் மேம்பாட்டிற்காக பா.ஜனதா அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு உணவு தானிய உற்பத்தியில் சுயசார்பு நிலையை அடைந்தோம். இதற்கு விவசாயிகள் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் காரணம். விவசாயத்துறை வளர்ச்சி அடைந்து இருந்தாலும் விவசாயிகள் இன்னும் பொருளாதார ரீதியாக பலம் பெறவில்லை. விவசாயிகளின் குழந்தைகள் உயர்கல்வி பெற உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். பிரதமர் சம்மான் திட்டத்தில் கர்நாடக அரசு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தலா ரூ.4 ஆயிரத்தை வழங்குகிறது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

இந்த மாநாட்டில் மத்திய விவசாயத்துறை மந்திரி நரேந்திரசிங் தாமோர், இணை மந்திரி ஷோபா, கர்நாடக விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல், தோட்டக்கலை மந்திரி முனிரத்னா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story