ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி; வாலிபர் கைது

சிக்பள்ளாப்பூர் தாலுகாவில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோலார் தங்வயல்:
சிக்பள்ளாப்பூர் தாலுகா நாராயணபுரா கிராமத்தில் கனரா வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. இங்கு சந்தேகம் எழும் வகையில் வாலிபர் ஒருவர் சுற்றித்திரிந்து கொண்டிருந்தார். அதைப்பார்த்த பொதுமக்கள் சிக்பள்ளாப்பூர் புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த நபரை கண்காணித்தனர். அப்போது அவர் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். இதையடுத்து போலீசார் அந்த நபரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியைச் சேர்ந்த சாகர்(வயது 29) என்பது தெரியவந்தது. மேலும் அவர் ஏற்கனவே சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் உள்ள பல ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து பணத்தை கொள்ளையடித்ததையும் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அந்த வாலிபர் மீது வழக்குப்பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.