சிவமொக்காவில் ஆவணங்கன் இன்றி எடுத்து சென்றரூ.1½ கோடி அரிசி, பாக்கு மூட்டைகள் பறிமுதல்
சிவமொக்காவில் சரியான ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.1½ கோடி மதிப்பிலான அரிசி, பாக்கு மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சிவமொக்கா-
சிவமொக்காவில் சரியான ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.1½ கோடி மதிப்பிலான அரிசி, பாக்கு மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனை
கர்நாடகத்தில் மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார், மாநிலம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். அதேபோல சிவமொக்கா மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படையினர் மற்றும் போலீசார் தீவிர சோதனைகள் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் சாகர் புறநகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் பாக்கு மூட்டைகள் எடுத்து செல்லப்பட்டது தெரியவந்தது. அந்த பாக்கு மூட்டைகளின் மதிப்பு ரூ.82 லட்சம் என்று கூறப்படுகிறது.
இந்த பாக்கு மூட்டைகளை எடுத்து செல்வதற்கான ஆவணங்களை போலீசார் கேட்டனர். அப்போது டிரைவர் எந்த ஆவணமும் இல்லை என்று கூறிவிட்டார். இதையடுத்து போலீசார் வாகனத்துடன் சேர்த்து அந்த பாக்கு மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
அரிசி, பாக்கு பறிமுதல்
இதேபோல அதே பகுதியில் மற்றொரு வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட ரூ.65½ லட்சம் மதிப்பிலான 15 டவுன் அரிசி மற்றும் பாக்கு மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதற்கு அடுத்தபடியாக சிராளகொப்பா சோதனை சாவடியில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.17 லட்சம் மதிப்பிலான சேலைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மொத்தம் 3 இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.1 கோடியே 64 லட்சம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.