காங்கிரஸ் கட்சி ஒற்றுமையுடன் போட்டியிட்டால் மீண்டும் ஆட்சியை பிடிக்கலாம் - அசோக் கெலாட்

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒற்றுமையுடன் போட்டியிட்டால் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கலாம் என அசோக் கெலாட் கூறியுள்ளார்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டிய ஆலோசனைக் கூட்டம் அடுத்த வாரம் டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், அம்மாநில முதல்-மந்திரி அசோக் கெலாட் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவரிடம் சில தலைவர்கள் தங்களின் சொந்த கட்சிக்கு எதிராக எச்சரிக்கை விடுவது பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கெலாட், "ஊடகங்கள்தான் இந்தப் பிரச்சினையை முன்வைக்கின்றன. நாங்கள் அப்படி ஒன்று இருப்பதாக நம்பவில்லை. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒற்றுமையுடன் போட்டியிட்டால் மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கலாம் நான் நம்புகிறேன்.
இது தொடர்பாக டெல்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. அதில் அனைவரும் அவர்களது யோசனைகளைக் கூறுவார்கள். அதன்பிறகு தலைமை தனது உத்தரவுகளை வழங்கும். காங்கிரஸ் தலைவர் முடிவினை அனைவரும் ஏற்றுக்கொண்டு தேர்தல் பணிக்கு திரும்ப வேண்டும். இந்த விவாதத்தில் கர்நாடக தேர்தல் அனுபவங்கள் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அது குறித்தும் விவாதிக்கப்படலாம். அனைவரும் இணைந்து எடுக்கும் முடிவினை ஏற்று நாங்கள் மேலும் முன்னேறுவோம்.
பணத்தை வாரி வழங்குவதாலோ நன்கொடைகளாலோ ஓர் அரசு உருவாக்கப்படுவதில்லை என்று பாஜகவுக்கு கர்நாடகா மக்கள் பாடம் புகட்டியுள்ளார்கள் என்று தெரிவித்தார்.