பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலை திட்ட என்ஜினீயர்களுக்கு விருது வழங்க வேண்டும்- டி.கே.சிவக்குமார் கிண்டல்


பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலை திட்ட என்ஜினீயர்களுக்கு விருது வழங்க வேண்டும்-  டி.கே.சிவக்குமார் கிண்டல்
x

ராமநகரில் மழைநீர் சூழ்ந்த பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலை திட்ட என்ஜினீயர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் கிண்டல் செய்துள்ளார்.

பெங்களூரு: ராமநகரில் மழைநீர் சூழ்ந்த பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலை திட்ட என்ஜினீயர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் கிண்டல் செய்துள்ளார். கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

என்ஜினீயர்களுக்கு விருது

பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் சூழ்ந்து பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தேசிய நெடுஞ்சாலை அமைக்கும்போது அதைவிட உயரமான பகுதியில் இருக்கும் நீர்நிலைகளை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் இந்த விஷயத்தை பெங்களூரு-மைசூரு நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் கவனிக்கவில்லை. அதன் காரணமாக தான் அந்த நெடுஞ்சாலையில் அதிகளவில் நீர் சூழ்ந்துள்ளது.

சாலை அமைப்பது என்றால் ஜல்லி, தார், கான்கிரீட் போட்டுவிட்டு பணத்தை பெறுவது அல்ல. மழை வரும்போது நீர் எவ்வாறு செல்ல வேண்டும், எங்கு கால்வாய் அமைக்க வேண்டும் என்பதை திட்டமிட வேண்டியது அரசு மற்றும் என்ஜினீயர்களின் கடமை ஆகும். ஒரு தேசிய நெடுஞ்சாலையின் நிலையே இவ்வாறு ஆகிவிட்டால் கிராமப்புற சாலைகளின் நிலை என்ன ஆகும்?. அந்த நெடுஞ்சாலையை அமைக்கும் என்ஜினீயர்களுக்கு பத்மபூஷண் விருதோ அல்லது வேறு ஏதாவது விருதோ வழங்க வேண்டும்.

நிவாரண உதவிகள்

ராமநகர் மாவட்டத்தில் பெய்த மழைக்கு 2 பேர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. நான் ராமநகர், சன்னபட்டணா, கனகபுராவில் வெள்ள சேதங்களை நேரில் பார்வையிட உள்ளேன். இந்த நெருக்கடியான நேரத்தில் ஆட்சியாளர்கள் சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டும். 10 நாட்களில் நிவாரணம் வழங்குவதாக அறிவித்தால் போதாது. அதை செயல்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த நிவாரண உதவிகள் கிடைக்க வேண்டும்.

ராமநகரில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் மக்களை வேறு இடத்திற்கு இடம் மாற்ற வேண்டும். மழையின் தேவை எந்த அளவுக்கு இருக்கிறது என்பது எனக்கு தெரியும். அதனால் மழை வரக்கூடாது என்று கூற மாட்டேன். அதிகளவில் மழை வரும்போது வெள்ள நீர் கடலுக்கு போய் சேருகிறது. இந்த நீரை தடுத்து மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் மேகதாது திட்டத்தை வகுத்துள்ளோம்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.


Next Story