கர்நாடக எல்லைகளில் சோதனை சாவடிகளை திறக்க வேண்டும்

கா்நாடக சட்டசபை தேர்தலையொட்டி கர்நாடக மாநில எல்லைகளில் சோதனை சாவடிகளை திறக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:-
உயர்மட்ட ஆலோசனை
கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அதற்கான முன்னேற்பாட்டு பணிகளை தேர்தல் ஆணையம் ஏற்கனவே தொடங்கிவிட்டது. இந்த நிலையில் சட்டசபை தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணைய மாநில தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ்குமார் மீனா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று பெங்களூருவில் நடைபெற்றது.
இதில் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் ராஜேந்திர சோழன், வெங்கடேஷ், கூடுதல் டி.ஜி.பி. அலோக்குமார் மற்றும் அமலாக்கத்துறை, வருமான வரி, வருவாய்த்துறை, கலால்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் மனோஜ்குமார் பேசியதாவது:-
சோதனை சாவடிகள்
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு மதுபானம் உள்பட பல்வேறு பரிசு பொருட்களை கொடுப்பதாக புகார் வருகிறது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் விற்பனையான மதுபானம் மற்றும் தற்போது விற்பனை ஆகும் மதுபானம் குறித்து கலால்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். கர்நாடக மாநில எல்லைகளில் சோதனை சாவடிகளை திறக்க வேண்டும்.
பரிசு பொருட்கள் வினியோகம் செய்வதை தடுக்க சட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனைகளை நடத்தும். போதைப்பொருள் கடத்தல், விற்பனையை கண்காணிக்க வேண்டும். இதற்காக ரெயில் நிலையங்கள், விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்க வேண்டும்.
கண்காணிக்க வேண்டும்
பண பரிமாற்றம் மற்றும் டிஜிட்டல் பண பரிமாற்றத்தை கண்காணிக்க வேண்டும். இதில் சட்டவிரோதமான முறையில் பரிமாற்றம் நடைபெறுவது தெரியவந்தால் அதன் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர், அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் பேசுகிறவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனோஜ்குமார் மீனா பேசினார்.