வாலிபரின் 2-வது மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் மோதல்


வாலிபரின் 2-வது மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் மோதல்
x

பெங்களூருவில் வாலிபரின் 2-வது மனைவியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட மோதலில் முதல் மனைவி படுகாயம் அடைந்தார்.

பெங்களூரு:-

விவாகரத்து கோரி வழக்கு

பெங்களூரு சந்திரா லே-அவுட்டில் வசித்து வருபவர் தேஜஸ். இவருக்கும் சைத்ரா என்பவருக்கும் இடையே கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடந்திருந்தது. திருமணமான சில ஆண்டுகள் தம்பதி சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். அதன்பிறகு, தேஜஸ், சைத்ரா இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதன் காரணமாக 2 பேரும் பிரிந்து வாழ முடிவு செய்தார்கள். இதையடுத்து, சமீபத்தில் விவாகரத்து கோரி தேஜஸ், சைத்ரா பெங்களூரு குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், முதல் மனைவியிடம் இருந்து சட்டப்படி விவாகரத்து பெறாமல் வேறு ஒரு பெண்ணுடன் தேஜசுக்கு தொடர்பு ஏற்பட்டதாகவும், பின்னர் அவரை 2-வது திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி சைத்ராவுக்கோ, அவரது குடும்பத்திற்கோ தெரியவில்லை. தற்போது தேஜஸ் 2-வது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார்.

2-வது மனைவிக்கு வளைகாப்பு

இதையடுத்து, சந்திரா லே-அவுட்டில் வைத்து தேஜசின் 2-வது மனைவிக்கு நேற்று வளைகாப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுபற்றி சைத்ராவுக்கு தெரியவந்தது. உடனே அவர், மகளிர் அமைப்பை சேர்ந்த பெண்களுடன், கணவரின் 2-வது மனைவியின் வீட்டுக்கு சென்றார். பின்னர் தன்னை விவாகரத்து செய்யாமல் 2-வது திருமணம் எப்படி செய்யலாம்?, இந்த திருமணம் செல்லாது என்று கூறி சைத்ரா தகராறு செய்தார்.

இதுதொடர்பாக சைத்ராவின் குடும்பத்தினருக்கும், தேஜசின் 2-வது மனைவியின் குடும்பத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் உண்டானது. அதே நேரத்தில் தேஜசுக்கு ஏற்கனவே திருமணம் நடந்திருந்தது பற்றி தங்களுக்கு தெரியாது என்று 2-வது மனைவியின் குடும்பத்தினர் தெரிவித்தனர். இதனை ஏற்க சைத்ரா குடும்பத்தினர் மறுத்து விட்டனர்.

பெண் படுகாயம்

வளைகாப்பு நிகழ்ச்சி நடக்கும்போதே வீட்டின் மாடி படிக்கட்டில் வைத்து 2 குடும்பத்தினரும் மோதிக் கொண்டனர். அப்போது ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். மேலும் சைத்ராவை தேஜசின் 2-வது மனைவியின் குடும்பத்தை சேர்ந்த சிலர் தாக்கினார்கள். இதில், அவரது முகத்தில் இருந்து ரத்த வந்ததுடன், பலத்தகாயமும் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்தவர்கள் 2 தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக தேஜஸ், அவரது 2-வது மனைவியின் குடும்பத்தினர் மீது சைத்ரா குடும்பத்தினர் சந்திரா லே-அவுட் போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சைத்ரா மற்றும் தேஜஸ் 2-வது மனைவி குடும்பத்தினர் மோதிக் கொள்ளும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Next Story