பெங்களூருவில் டிஜிட்டல் மின்மீட்டர் பொருத்தம்- பெஸ்காம் தகவல்


பெங்களூருவில் டிஜிட்டல் மின்மீட்டர் பொருத்தம்-  பெஸ்காம் தகவல்
x

பெங்களூருவில் டிஜிட்டல் மின்மீட்டர் பொருத்தும் பணி தொடங்கி இருப்பதாக பெஸ்காம் கூறியுள்ளது.

பெங்களூரு: பெங்களூருவில் டிஜிட்டல் மின்மீட்டர் பொருத்தும் பணி தொடங்கி இருப்பதாக பெஸ்காம் கூறியுள்ளது.

டிஜிட்டல் மின்மீட்டர்கள்

பெங்களூரு மின்சார வினியோக நிறுவனம் (பெஸ்காம்) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-பெங்களூருவில் தற்போது பயன்பாட்டில் உள்ள மின்மீட்டர்களை மாற்றிவிட்டு டிஜிட்டல் மின்மீட்டர்களை பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக ராஜாஜிநகர், ராஜராஜேஸ்வரிநகர், ஒயிட்பீல்டு, இந்திரா நகர் ஆகிய 4 மண்டலங்களில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த பணிகைள தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம். தினமும் 900 மின்மீட்டர்களை மாற்ற முயற்சி மேற்கொண்டுள்ளோம். கடந்த 3 வாரங்களில் 16 ஆயிரம் டிஜிட்டல் மின்மீட்டர்களை பொருத்தி இருக்கிறோம். வருகிற 2024-ம் ஆண்டுக்குள் டிஜிட்டல் மின்மீட்டர் பொருத்தும் பணிகள் நிறைவு செய்யப்படும். பெங்களூருவில் இந்த பணிகள் முடிவடைந்தவுடன் பிற பகுதிகளில் கவனம் செலுத்தப்படும். புதிய டிஜிட்டல் மின்மீட்டரில் மின்சார வேகம், அதன் பயன்பாடு அளவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை தெரிந்து கொள்ள வசதி உள்ளது.

கடைகள் திறக்கப்படும்

இந்த டிஜிட்டல் மின்மீட்டர்கள் இலவசமாக பொருத்தப்படுகிறது. இதற்காக மின் நுகர்வோரிடம் இருந்து எந்த கட்டணமும் வசூலிக்க மாட்டோம். இந்த டிஜிட்டல் மின்மீட்டர் பொருத்தும் திட்டத்தின் செலவு ரூ.285 கோடி ஆகும். இந்த டிஜிட்டல் மின்மீட்டரின் விலை ரூ.934-ல் இருந்து ரூ.2,312 வரை இருக்கிறது. புதிய வாடிக்கையாளர்களுக்கு இந்த டிஜிட்டல் மின்மீட்டர்கள் கிடைக்க அதற்கான கடைகள் திறக்கப்படும்.

இவ்வாறு பெஸ்காம் தெரிவித்துள்ளது.


Next Story