'சமூக விரோதிகளின் பேச்சை கேட்க வேண்டாம்'


சமூக விரோதிகளின் பேச்சை கேட்க வேண்டாம்
x

சமூக விரோதிகளின் பேச்சை கேட்க வேண்டாம் என்று பஞ்சாரா மக்களுக்கு எடியூரப்பா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பெங்களூரு:-

இட ஒதுக்கீடு விஷயத்தில் சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புராவில் உள்ள தனது வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

அசம்பாவித சம்பவங்கள்

சிகாரிப்புராவில் எனது வீட்டின் மீது பஞ்சாரா சமூகத்தினர் கல்வீசி தாக்கியது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தாண்டா (குக்கிராமம்) வளர்ச்சி வாரியத்தை நான் முதல்-மந்திரியாக இருந்தபோது அமைத்து கொடுத்தேன். இட ஒதுக்கீடு விஷயத்தில் பஞ்சாரா சமூகத்தினர் அரசின் முடிவை தவறாக புரிந்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள குழப்பம் சரிசெய்யப்படும். இதற்காக பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்.

சமூக விரோதிகளின் பேச்சை அவர்கள் கேட்க வேண்டாம். அந்த சமூகத்தின் நியாயத்தை நிலை நாட்டும் பணியை நான் செய்வேன். அசம்பாவித சம்பவங்களில் யாரும் ஈடுபட வேண்டாம். அனைவரும் அமைதி காக்க வேண்டும். நான் 4 முறை முதல்-மந்திரி ஆனதற்கு பஞ்சாரா சமூகத்தினரும் காரணம் என்பதை நான் அறிவேன். நான் நாளை(புதன்கிழமை) சிகாரிப்புராவுக்கு சென்று சம்பவத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து பேச உள்ளேன்.

நினைக்கவில்லை

தற்போதைக்கு யார் மீதும் குறை சொல்ல மாட்டேன். நான் போலீஸ் அதிகாரிகளுடன் தொலைபேசியில் பேசி யார் மீதும் அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளேன். எனது வீட்டின் மீது தாக்குதல் நடந்த சம்பவத்தில் யாரும் பின்னணியில் இருப்பதாக நான் நினைக்கவில்லை.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.


Next Story