200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கினாலும் மின் கட்டண வரி செலுத்த வேண்டியது கட்டாயம்?

கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்பட உள்ளது. 200 யூனிட் மின்சாரம் வழங்கினாலும் மின் கட்டண வரியை கட்டாயம் செலுத்த வேண்டும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
பெங்களூரு:-
மந்திரிசபை ஒப்புதல்
கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காங்கிரஸ் 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்திருப்பதால் மாநிலத்தின் பல மாவட்டங்களில் உள்ள கிராம மக்கள் இந்த மாதமே (மே) மின் கட்டணம் செலுத்த மாட்டோம் என்று கூறி வருகிறார்கள். இதனால் கிராமப்புறங்களில் மின் கட்டணம் வசூல் செய்ய முடியாமல் மின்வாரிய ஊழியர்கள் திணறி வருகின்றனர்.
இதற்கிடையில், முதல்-மந்திரியாக சித்தராமையா நேற்று பதவி ஏற்றதும் மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு, 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதற்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்திருப்பதாக மட்டுமே முதல்-மந்திரி சித்தராமையா கூறினார். ஆனால் மாநிலம் முழுவதும் உள்ள அனைவருக்கும் 200 யூனிட் இலவச மின்சாரமா?, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமானதா என்பது பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
மின் கட்டண வரி செலுத்த...
இந்த நிலையில், 200 யூனிட் இலவச மின்சாரம் கிடைத்தாலும் மின் கட்டண வரியை ஒவ்வொருவரும் செலுத்தி தான் ஆக வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதாவது 200 யூனிட் மின்சாரம் பயன்படுத்தினாலும், மின் கட்டணமே செலுத்தாமல் இருக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மின் கட்டண வரி என்பதை செலுத்த வேண்டிய நிலை இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு மாதமும் வரும் மின் கட்டணத்துடன் நிர்ணயித்த வரி மற்றும் மின்சாரம் பயன்படுத்தியதற்கான வரி என 2 விதமான வரி மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் ஒவ்வொருவரும் மின் கட்டண வரியாக ரூ.110 முதல் ரூ.210 வரை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று மின்வாரிய அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரூ.110 முதல் ரூ.210 வரை
ஏனெனில், கடந்த 2 ஆண்டுகளில் ஒரு யூனிட்டுக்கு எவ்வளவு வரி வசூலாகிறது என்பது பற்றி கர்நாடகத்தில் உள்ள அனைத்து மின்வாரியங்களும் அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த ஆண்டில் ஒரு யூனிட் மின்சாரம் 48 பைசாவுக்கும், இந்த ஆண்டு(2023) ஒரு யூனிட் மின்சாரம் 70 பைசாவுக்கும் உயர்த்தப்பட்டது. இதில், 48 பைசாவில் நிர்ணயித்த வரியாக 30 பைசாவும், 70 பைசாவில் 55 பைசாவும் நிர்ணயித்தவரியாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
மாநிலத்தில் 1.92 கோடி வீடுகளில் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் வீடுகளில் 100 யூனிட்டுக்கும் குறைவான மின்சாரமே பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறு 100 யூனிட்டுக்கும் கீழ் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு பெரும்பாலும் கட்டணம் வருவதில்லை என்று சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் நிர்ணயித்த வரியை செலுத்த வேண்டும் என்று கூறினால் ரூ.110 முதல் ரூ.210 வரை செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது.
கூடிய விரைவில் அறிவிப்பு
இந்த 200 யூனிட் இலவச மின்சாரம் எப்படி வழங்கப்படும், யாருக்கு வழங்கப்படும், நிர்ணயித்த வரி செலுத்த வேண்டுமா? என்பது பற்றிய எந்த விதமான தெளிவான தகவல்களும் இல்லை. 200 யூனிட்டுக்கு குறைவாக பயன்படுத்தினால் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டாமா?, 201 யூனிட் பயன்படுத்தினாலும் முழு கட்டணம் செலுத்த வேண்டுமா? என்பதும் தெரியவில்லை.
இதுபற்றி வருகிற 24-ந் தேதி மீண்டும் மந்திரிசபை கூட்டம் நடைபெற உள்ளதாகவும், அப்போது அதுபற்றி ஆலோசிக்கப்படும் என்றும் முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார். இதனால் கூடிய விரைவில் 200 யூனிட் இலவச மின்சாரம் யாருக்கு கிடைக்கும், யாருக்கு கிடைக்காது என்பது பற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளது.