டி.கே.சிவக்குமாரை முன்னாள் ரவுடி என சொல்ல மாட்டேன்

காங்கிரஸ் தலைவரான டி.கே.சிவக்குமாரை முன்னாள் ரவுடி என சொல்ல மாட்டேன் என்று பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:-
பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா கட்சி அலுவலகத்தில கட்சியின் தேசிய பொதுச் செயலாளரான சி.டி.ரவி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜனதாவில் இருப்பவர்கள் அனைவரும் ரவுடி என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர். பொதுவாக ரவுடி பட்டியலில் இருப்பவர்களை தான் ரவுடி என்பார்கள். அரசியல் காரணங்களுக்காக எனது பெயர் ரவுடி பட்டியலில் சேர்க்கப்பட்டது. பா.ஜனதாவில் ரவுடிகள் சேர்க்கப்படுவதாக கூறும் விவகாரம் பற்றி ஏற்கனவே மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் விளக்கம் தெரிவித்துள்ளார். பிரபல ரவுடி கொத்துவால் ராமசந்திரனின் கூட்டாளிகள் கூட, இன்று பிரபல ரவுடிகளாக உள்ளனர். அதனால் காங்கிரஸ் கட்சியின் தலைவரான டி.கே.சிவக்குமாரை ரவுடி, முன்னாள் ரவுடி என்று சொல்ல மாட்டேன். காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வான அகண்ட சீனிவாச மூர்த்தியின் வீட்டுக்கு, அவரது கட்சியை சேர்ந்தவர்கள் தான் தீவைத்தார்கள். இநத சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் காங்கிரஸ் கட்சியினர் தான். காங்கிரஸ் தலைவர்கள் 4 தலைமுறைக்கு சொத்து சேர்த்து வைத்திருப்பதாக முன்னாள் சபாநாயகரான ரமேஷ்குமார் தான் சொல்லி இருந்தார். 4 தலைமுறைக்கு சொத்து சேர்க்க நேர்மையான முறையில் முடியுமா?. இதுபற்றி காங்கிரஸ் தலைவர்கள் தான் விளக்கம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.