எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவாக அரசு ஊழியர்கள் பிரசாரத்தில் ஈடுபட கூடாதுகலெக்டர் சதீஷ் எச்சரிக்கை
எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவாக அரசு ஊழியர்கள் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது என்று கலெக்டர் சதீஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
குடகு-
எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவாக அரசு ஊழியர்கள் பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது என்று கலெக்டர் சதீஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேட்புமனு தாக்கல்
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் அதிகாரிகள் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார்கள். அதுபோல் நேற்று குடகு மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான சதீஷ், மடிகேரியில் உள்ள தனது அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகள், பணியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் அவர் பேசும்போது கூறியதாவது:-
சட்டசபை தேர்தலையொட்டி கடந்த 13-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இதனால் தேர்தல் விதிகளை அதிகாரிகள் கடுமையாக பயன்படுத்த வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்ய வரும் வேட்பாளர்கள் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்கு முன்பாகவே ஊர்வலம் உள்ளிட்டவற்றை நிறுத்திவிட வேண்டும்.
கடும் நடவடிக்கை
வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது, செல்லும்போதும் அந்த நிகழ்வுகளை போலீசார் முழுமையாக வீடியோ எடுக்க வேண்டும். இந்த சந்தர்ப்பத்தின்போது எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும் நடந்து விடக்கூடாது. இதில் அதிகாரிகள் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். வேட்பாளர்களின் நிகழ்வுகளை பறக்கும் படையினர் கண்காணிக்க வேண்டும். அவர்களின் வரவு, செலவுகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவாக அரசு அதிகாரிகள், பணியாளர்கள், போலீசார் என அரசு துறைகளில் பணியாற்றும் யாரும் செயல்படவோ, பிரசாரத்தில் ஈடுபடவோ கூடாது. சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் பிரசாரம் செய்யக்கூடாது. மீறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் சதீஷ் கூறினார்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் நஞ்சுண்டேகவுடா, மடிகேரி தொகுதி தேர்தல் அதிகாரி யதீஷ் உல்லால், விராஜ்பேட்டை தொகுதி தேர்தல் அதிகாரி சபானா எம்.ஷேக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.