கர்நாடகத்தில் கிராம பஞ்சாயத்து தலைவர்களின் அதிகாரத்தை குறைக்கும் திட்டம் இல்லை

கர்நாடகத்தில் கிராம பஞ்சாயத்து தலைவர்களின் அதிகாரத்தை குறைக்கும் திட்டம் இல்லை என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா கூறியுள்ளார்.
பெங்களூரு: கர்நாடகத்தில் கிராம பஞ்சாயத்து தலைவர்களின் அதிகாரத்தை குறைக்கும் திட்டம் இல்லை என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா கூறியுள்ளார்.
குறைக்கும் எண்ணம்
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலை போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா நேரில் சந்தித்து பேசினார். அப்போது அரக ஞானேந்திரா முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையிடம், கர்நாடகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் குறிப்பாக கிராம பஞ்சாயத்து தலைவரின் அதிகாரத்தை குறைப்பதாக தகவல் வெளியாகி இருப்பதாகவும், இதுகுறித்து தாங்கள் விளக்கம் அளிக்குமாறு கேட்டு கொண்டார்.
அதற்கு முதல்-மந்திரி, கர்நாடகத்தில் கிராம சுவராஜ்ஜியம் மற்றும் பஞ்சாயத்து சட்டத்தில் சட்டத்திருத்தம் செய்யும் திட்டம் அரசுக்கு இல்லை என்றும், கிராம பஞ்சாயத்து தலைவர்களின் அதிகாரத்தை குறைக்கும் எண்ணம் இல்லை என்றும் தெளிவுப்படுத்தியதாக அரக ஞானேந்திரா கூறினார். இதுகுறித்து மந்திரி அரக ஞானேந்திரா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
யாரும் நம்ப வேண்டாம்
கர்நாடகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தை குறைப்பதாக தகவல் வெளியானது. அதுபற்றி முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை நேரில் சந்தித்து பேசினேன். அவ்வாறு எந்த திட்டமும் அரசுக்கு இல்லை என்று அவர் கூறியுள்ளார். ஜனநாயகத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் பங்கு முக்கியமானது என்றும், வருங்கால தலைவரை உருவாக்குவதில் அந்த அமைப்புகள் முக்கிய பங்காற்றுவதாகவும் கூறினார்.
கிராம பஞ்சாயத்து ஊழியர்களின் சேவை விதிமுறைகளில் திருத்தம் செய்து கிராம பஞ்சாயத்து தலைவர், துணைத்தலைவர் மற்றும் கவுன்சிலர்களின் அதிகாரத்தை முடக்க இருப்பதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை. அதை யாரும் நம்ப வேண்டாம்.
இவ்வாறு அரக ஞானேந்திரா கூறினார்.