மங்களூருவில் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தவர் கைது

மங்களூருவில் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
மங்களூரு-
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு வலச்சில் பகுதியை ேசர்ந்தவர் நவாஸ் ஷெரீப். கடந்த ஆண்டு இவரை ஆயுதங்கள் கடத்தியதாக மங்களூரு வடக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அதன் பின்னர் நவாஸ் கோர்ட்டில் ஆஜர் ஆகவில்லை. இதுதொடர்பான வழக்கு மங்களூரு கோர்ட்டில் நடந்து வருகிறது. இதையடுத்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இந்தநிலையில் நவாசை பிடிப்பதற்கு தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் அவரை தேடி வந்தனர். மேலும் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இதுதொடர்பான நோட்டீசை மாநிலத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும், விமான நிலையங்களுக்கும் போலீசார் வழங்கினர்.
இந்தநிலையில் துபாயில் இருந்து மும்பைக்கு விமானத்தில் நவாஸ் வருவதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படை போலீசார் மும்பை விமான நிலையத்திற்கு சென்றனர். அப்போது விமானத்தில் வந்திறங்கிய நவாசை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை மங்களூரு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.