கர்நாடக மந்திரிசபை இன்று விரிவாக்கம்:மேலும் 24 பேர் மந்திரிகளாக பதவி ஏற்கிறார்கள்


கர்நாடக மந்திரிசபை இன்று விரிவாக்கம்:மேலும் 24 பேர் மந்திரிகளாக பதவி ஏற்கிறார்கள்
x

கா்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 135 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

பெங்களூரு:-

5 திட்டங்களுக்கு ஒப்புதல்

இதையடுத்து கர்நாடக புதிய முதல்-மந்திரியாக சித்தராமையா கடந்த 20-ந் தேதி பதவி ஏற்றார். அவருடன் டி.கே.சிவக்குமார் துணை முதல்-மந்திரியாகவும், 8 பேர் மந்திரிகளாகவும் பதவி ஏற்றனர்.

அதைத்தொடர்ந்து அன்றைய தினமே நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் காங்கிரசின் முக்கிய வாக்குறுதிகளான இலவச மின்சாரம், தலா 10 கிலோ அரிசி, அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், படித்த வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம், டிப்ளமோ படித்தோருக்கு ரூ.1,500, குடும்ப தலைவிகளுக்கு மாதம் தலா ரூ.2,000 ஆகிய 5 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும் தேதி குறித்து அடுத்த மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.

இலாகாக்கள் ஒதுக்கவில்லை

அதைத்தொடர்ந்து கர்நாடக சட்டசபை கூட்டம் கடந்த 22-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெற்றது. இதில் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றுக் கொண்டனர். புதிய மந்திரிகள் பதவி ஏற்றாலும் அவா்களுக்கு இதுவரை இலாகாக்கள் ஒதுக்கப்படவில்லை. ஒரு வாரமாகியும் அவர்கள் இலாகாக்கள் இல்லாத மந்திரிகளாகவே இருக்கிறார்கள்.

அதைத்தொடர்ந்து 24-ந் தேதியே சித்தராமையா, டி.கே.சிவக்குமாா் ஆகியோர் டெல்லி சென்றனர். அங்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா உள்ளிட்டோரை சந்தித்து, மந்திரிசபை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்தினர்.

சோனியாவுடன் ஆலோசனை

நேற்று சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சித்தராமையா நேரில் சந்தித்து பேசினார். நேற்று முன்தினம் பெங்களூரு திரும்பிய டி.கே.சிவக்குமார் நேற்று மீண்டும் டெல்லி சென்று சோனியா காந்தியை சந்தித்தார். அவர்கள் 2 பேரும் சோனியா காந்தியை தனித்தனியாக சந்தித்து பேசினர். இந்த சந்தர்ப்பத்தில் ராகுல்காந்தியும் உடன்

இருந்துள்ளார். மந்திரி பதவியை எதிர்நோக்கியுள்ள 50-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் டெல்லியில் முகாமிட்டு, பதவியை பெற தீவிர முயற்சி மேற்கொண்டனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் மேலிடம், மந்திரிசபையை விரிவாக்கம் செய்ய சித்தராமையாவுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த முறை 24 பேருக்கு மந்திரி பதவி வழங்க காங்கிரஸ் மேலிடம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

மந்திரிசபையில் ஏற்கனவே 10 பேர் உள்ள நிலையில் இந்த 24 பேரையும் சேர்த்தால், அதன் பலம் 34 ஆக உயரும். இதன் மூலம் மந்திரிசபையில் அனைத்து இடங்களும் நிரப்பப்படுகிறது. மந்திரி பதவி கிடைக்காமல் அரசுக்கு எதிராக எம்.எல்.ஏ.க்கள் யாராவது போர்க்கொடி தூக்கினால் அவர்களை சமாதானப்படுத்தவும், வாரிய, கழக தலைவர்கள் பதவி வழங்கவும் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

24 பேர் புதிய மந்திரிகள்

காங்கிரஸ் மேலிடம் நேற்று இரவு புதியதாக பதவி ஏற்க உள்ள 24 மந்திரிகளின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள பெயர் விவரம் பின்வருமாறு:-

தினேஷ் குண்டுராவ்(காந்திநகர் தொகுதி), ஈஸ்வர் கன்ட்ரே (பால்கி தொகுதி), லட்சுமி ஹெப்பால்கர் (பெலகாவி புறநகர்), சிவானந்த பட்டீல் (பசவனபாகேவாடி), சரணபசப்பா தர்சானபுரா (சகாப்புரா), எச்.சி.மகாதேவப்பா (டி.நரசிப்புரா), வெங்கடேஷ் (பிரியப்பட்டணா), எஸ்.எஸ்.மல்லிகார்ஜூன் (தாவணகெரே), பைரதி சுரேஷ் (ஹெப்பால்), கிருஷ்ண பைரேகவுடா (பேட்ராயனபுரா),

ரகீம்கான் (பீதர் வடக்கு), எம்.சி.சுதாகர் (சிந்தாமணி), டி.சுதாகர் (இரியூர்), எச்.கே.பட்டீல் (கதக்), செலுவராயசாமி (நாகமங்களா), கே.என்.ராஜண்ணா (மதுகிரி), சந்தோஷ் லாட் (கல்கட்டகி), மது பங்காரப்பா (சொரப்), மங்கல் வைத்யா (பட்கல்), சிவராஜ் தங்கடகி (கனககிரி), ஆர்.பி.திம்மாபுரா (முதோல்), சரண பிரகாஷ் பட்டீல் (சேடம்), என்.எஸ்.போசராஜூ (மான்வி), நாகேந்திரா (பல்லாரி புறநகர்) ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

கவர்னர் மாளிகையில் இன்று விழா

இந்த நிலையில் கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் இன்று (சனிக்கிழமை) காலை 11.45 மணிக்கு கவர்னர் மாளிகையில் உள்ள கண்ணாடி மாளிகையில் நடைபெற உள்ளது. புதிய மந்திரிகளுக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மந்திரிகள் பதவி ஏற்ற பிறகு இன்று மாலைக்குள் அவர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு முக்கியமான 2 இலாகாக்கள் கிடைக்கலாம் என்று பேசப்படுகிறது.

பாதுகாப்பு

மந்திரிகள் பதவி ஏற்பு விழாவில் முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த விழாவையொட்டி கவர்னர் மாளிகை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சில சாலைகளில் போக்குவரத்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.


Next Story